2012-09-10 16:32:57

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம்–ஒரு முன்னோட்டம்


செப்.10,2012 RealAudioMP3 . ஹெல்மன் என்ற ஓவியர் காண்பவரைக் கவர்ந்திழுக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அந்த ஓவியத்தில் கடவுள் மூடியிருக்கும் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார். தனது இந்த ஓவியத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார் ஹெல்மன். பார்வையாளர்கள் எப்படி இரசித்துப் பார்க்கிறார்கள் என்றும் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த தத்ரூபமான ஓவியத்தைப் பார்த்த ஏறத்தாழ எல்லாருமே வியந்தபடி சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஒரேயொருவர் மட்டும், “ஐய்யே.. இந்தக் கதவில் சாவித்துவாரம் இல்லையே. சாவியில்லாமல் கதவை எப்படித் திறக்க முடியும்?” என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தார். அவர் அப்படிச் சொன்னதும் சென்று கொண்டிருந்த மக்கள் அப்படியே நின்றுவிட்டனர். ஓவியர் ஹெல்மன் அந்த மனிதரிடம் புன்னகையுடன் சொன்னார் : “தம்பி... சாவித்துவாரமும், சாவியும் வெளியில் இல்லை. உள்ளேதான் இருக்கிறது. உள்ளே இருக்கும் நீதான் கதவைத் திறக்க வேண்டும்” என்று. ஓவியர் கொடுத்த விளக்கத்திற்குப் பொருள் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த மக்களிடம் மீண்டும் ஓவியர் சொன்னார்:“தரிசனம் கதவைத்தான் தட்டும். தரிசனம் பெறவேண்டியது நீங்கள் தாம்” என்று.
வழிகாட்டிகள், தரிசனங்கள் கிடைக்கும் வழிகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் அந்த வழிகளைப் பின்சென்று தரிசனங்களைப் பெற வேண்டியது அவரவர் திறமையைப் பொறுத்தது. வெறுப்புள்ள இடத்தில் அன்பையும், காயம்பட்ட இடத்தில் மன்னிப்பையும், இணக்கமற்ற இடத்தில் ஒப்புரவையும், ஆதரவற்ற இடத்தில் ஆறுதலையும் விதைப்பதற்காக மூன்று நாள்கள் கொண்ட ஒரு திருப்பயணத்தை வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்தப் பயணம், ஆயுதங்களின் அலறல் சப்தங்கள் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கும் மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள லெபனன் நாட்டில்தான் இடம்பெறவிருக்கின்றது. இது ஒரு துணிச்சலான, நம்பிக்கை நிறைந்த திருப்பயணம் என்றுதான் சொல்லப்படுகின்றது. காரணம் இந்நாள்களில் லெபனனின் அண்டை நாடான சிரியாவில் நடக்கும் சண்டையாகும்.
உலக வரைபடத்தில் இந்த லெபனன் நாடு எங்கு அமைந்திருக்கின்றதென்று நமக்குத் தெரியும். இந்நாட்டுக்கு வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இஸ்ரேலும், மேற்கே மத்தியதரைக் கடலும் எல்லைகளாக உள்ளன. ஏழாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளின் கலாச்சார வரலாற்றைக் கொண்ட இந்நாடு 400 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டமான் பேரரசின்கீழ் இருந்தது. முதலாம் உலகப் போரில் இந்தப் பேரரசு வீழ்ந்தது. இந்த உலகப் போர் முடிந்தபோது பெய்ரூட்டிலும் மவுண்ட் லெபனனிலும் ஒரு இலட்சம் மக்கள், அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 30 விழுக்காட்டினர் பசியினால் இறந்தனர். அத்துடன் இந்த முதல் உலகப் போர் முடிந்த 1918ம் ஆண்டிலிருந்து இந்நாடு பிரான்சின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. பின்னர் 1943ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. இந்த ஆண்டில் லெபனனில் ஒரு வித்தியாசமான எழுதப்படாத தேசிய உடன்பாடு ஒன்றும் ஏற்பட்டது. ஏனெனில் லெபனன் பல சமயத்தவரை உள்ளடக்கிய நாடாகும். கிறிஸ்தவர்கள் 39.9 விழுக்காடும், Shia இசுலாம் பிரிவினர் 25.5 விழுக்காடும், சுன்னி இசுலாம் பிரிவினர் 25.3 விழுக்காடும், ஷியா இசுலாத்திலிருந்து தோன்றிய Druze பிரிவினர் 5.2 விழுக்காடும், சமயமற்றோர் 2.4 விழுக்காடும், பிற மதத்தினர் 1.7 விழுக்காடும் உள்ளனர். ஆயினும் சட்டப்படி பதிவு செய்துள்ள முஸ்லீம்கள் ஏறக்குறைய 54 விழுக்காடாகவும், கிறிஸ்தவர்கள் 41 விழுக்காடாகவும் உள்ளனர். மேலும், கிறிஸ்தவத்திலே மாரனைட்ரீதி க்த்தோலிக்கம், கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபை, அர்மேனிய அப்போஸ்தலிக்கச் சபை, அசீரிய சபை, சிரிய ஆர்த்தடாக்ஸ், கல்தேய கத்தோலிக்கம், சிரியன் கத்தோலிக்கம் எனப் பிரிவுகள் உள்ளன. இச்சபைகளில் பெரும்பான்மையினோர் மாரனைட்ரீதி க்த்தோலிக்கர்கள். எனவே 1943ம் ஆண்டின் உடன்பாட்டின்படி, லெபனன் நாட்டின் அரசுத்தலைவர் மாரனைட்ரீதி கிறிஸ்தவராகவும், நாடாளுமன்ற சபாநாயகர் ஷியா முஸ்லீமாகவும், பிரதமர் சுன்னி முஸ்லீமாகவும், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் மற்றும் துணைப் பிரதமர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவராகவும் இருக்க வேண்டும்.
லெபனன் நாடு இயற்கை வளமும் பொருள் வளமும் மிகுந்த நாடு. சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் நாடு. இதனால்தான் லெபனன், “கீழை நாடுகளின் சுவிட்சர்லாந்து” எனவும், தலைநகர் பெய்ரூட், “மத்திய கிழக்கின் பாரிஸ்” எனவும் அழைக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், இந்நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உள்நாட்டுப் போர்களைச் சந்தித்து அரசியலிலும் உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டது. 1948ம் ஆண்டு மே மாதத்தில் லெபனன் நாடு, இஸ்ரேலுக்கு எதிராக அண்டை அரபு நாடுகளுக்கு ஆதரவளித்தது. இஸ்ரேலுக்கு எதிரான இச்சண்டையில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பாலஸ்தீனியர்கள் லெபனனுக்குச் சென்றனர். ஆயினும் போர் முடிந்த பின்னர் இவர்கள் பாலஸ்தீனம் திரும்பி வருவதற்கு இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. எனவே இன்றும் லெபனனில் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனிய அகதிகள் உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
லெபனன் நாடு 1975ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை கடுமையான உள்நாட்டுப் போராலும் சேதமடைந்தது. 15 ஆண்டுகள் இடம்பெற்ற இச்சண்டையில் பொருளாதாரமும் மனிதவாழ்வும் சொத்துக்களும் அதிகம் சேதமடைந்தன. இச்சண்டையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்தனர். மேலும் 2 இலட்சம் பேர் காயமடைந்தனர். சுமார் 9 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். 1990ம் ஆண்டில் சண்டை முடிந்த கையோடு அந்நாட்டை சிரியா ஆக்ரமித்தது. இந்த ஆக்ரமிப்பு 2005ம் ஆண்டுவரை நீடித்தது. சிரியாவுடன் 375 கிலோ மீட்டர் தூரத்தை எல்லையாகக் கொண்டுள்ள லெபனனிலும், சிரியாவில் தற்போது அரசுக்கும் எதிர்தரப்பு புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் கடும் சண்டையின் பாதிப்பு தெரிகின்றது. ஏனெனில் Shiite முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தற்போதைய லெபனன் அரசு, சிரியா நாட்டு அரசுத்தலைவர் Bashar al-Assad அரசுக்கு மிகவும் நெருக்கமானது. அதேசமயம் லெபனனில் பெரும்பான்மையாக வாழும் Sunni இசுலாம் பிரிவினர் Assad அரசை எதிர்ப்பவர்கள். இந்த இரண்டு முஸ்லீம் பிரிவினருக்கு இடையே கடும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்று, கடந்த ஜூனில் லெபனன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ள இயேசு சபை அருள்தந்தை Paolo Dall’Oglio கூறினார். எனவே லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை தனது பாதுகாப்புக்கு இரகசிய காவல்துறையின் உதவியைக் கேட்க வேண்டும் என்று இக்குரு பரிந்துரை செய்திருக்கிறார்.
சிரியாவில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் திருத்தந்தையின் இத்திருப்பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று பலர் கேள்வி எழுப்பினர். ஆயினும், திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கடந்த வாரத்தில் இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னார். செப்டம்பர் 14 முதல் 16 வரை ஏற்கனவே திட்டமிட்டபடி இத்திருப்பயணம் இடம்பெறும் என்று அறிவித்தார். இது ஒரு துணிச்சலான மற்றும் நம்பிக்கையின் பயணமாகப் பன்னாட்டு அளவில் நோக்கப்படுகின்றது என்றும் இச்சனிக்கிழமையன்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார். அத்துடன், திருத்தந்தையின் இத்திருப்பயணம் அரசியல் ரீதியானது அல்ல, மாறாக ஆன்மீக ரீதியிலானது. மேலும், Hezbollah இயக்கத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தற்போதைய லெபனன் அரசு திருத்தந்தையின் இத்திருப்பயணத்தை மிகவும் வரவேற்றுள்ளது. இப்பயண நாள்களில் நடைபெறும் ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சிகளிலும் தாங்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. லெபனன் பிரதமர் Najib Mikatiவும், செப்டம்பர் 15ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளார். திருத்தந்தையின் பயண நிகழ்வுகளில் மக்கள் பங்கு கொள்வதற்கு உதவியாக அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்களும், பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் மூடப்படும் என பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
லெபனன் நாட்டில் கிறிஸ்தவர் மட்டுமல்லாமல், முஸ்லீம்களும் இப்பயணத்தை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. வருகிற புதன் இரவு, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோர் இணைந்து பெய்ரூட்டின் மரியா பூங்காவில் திருத்தந்தையின் இத்திருப்பயணத்திற்காகத் திருவிழிப்புச் செப வழிபாடு நடத்தவுள்ளனர். வருகிற சனிக்கிழமை காலையில் திருத்தந்தை அந்நாட்டின் முஸ்லீம் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார் என்று இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்யும் அருள்பணி Marwan Tabet அறிவித்தார்.
லெபனன் மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்வரை இத்திருப்பயணம் நடக்குமா என்ற சந்தேகத்தில்தான் இருந்தனர். ஆனால் இப்பயணம் உறுதியான பின்னர் அனைத்துக் கிறிஸ்தவர்களும் நகர சபைகளும் சமூக அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் மும்முரமாகத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பகலும் இரவும் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்பயணம் லெபனனுக்கு மட்டுமல்லாமல், மத்திய கிழக்குப் பகுதி அனைத்துக்கும் முக்கியமானது. உண்மையிலே திருத்தந்தை 16ம் பெனடிக்ட், லெபனனில் மிகவும் வரவேற்கப்படுகிறார் என்று அருள்பணி Tabet வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
RealAudioMP3 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இந்த லெபனன் திருப்பயணம் பற்றி மூவேளை செப உரைகளில் எடுத்துச் சொல்லி வருகிறார். இஞ்ஞாயிறன்றும் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் ஆற்றிய மூவேளை செப உரைக்குப் பின்னர் ப்ரெஞ்ச் மொழியில் இது பற்றிப் பேசினார். எனது அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு இத்திருப்பயணம் அமைதியின் அடையாளமாக இருக்கின்றது, இந்த அப்போஸ்தலிக்கப் பயணம் லெபனனுக்கும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்குமானது, லெபனனையும், மத்திய கிழக்குப் பகுதியையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றார்.
RealAudioMP3 இங்கு கூடியிருக்கும் அன்புத் திருப்பயணிகளுக்கும், வானொலி அல்லது தொலைக்காட்சி வழியாக இந்த மூவேளை செப உரையில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இதனைத் தான் சொல்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை. 2010ம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பான அப்போஸ்தலிக்க ஏட்டை இந்த லெபனன் திருப்பயணத்தில் வெளியிடவிருக்கிறேன். முடிவில்லாத மோதல்களால் நீண்டகாலமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்களின் துன்பங்களை அறிவேன். இம்மக்கள் அன்றாட வாழ்வில் எல்லாவிதமான துன்பங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் குடும்பங்களையும் தொழில்களையும் விட்டுவிட்டு அமைதியான இடத்தைத் தேடும் இம்மக்கள்மீது மிகுந்த கவலை கொண்டுள்ளேன். அப்பகுதியைப் பாதித்துள்ள பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது கடினம் என்றாலும், வன்முறைகளையும் பதட்டநிலைகளையும் வளரவிட்டுக் கொண்டு இருக்க முடியாது. எனவே இந்த மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி கிடைப்பதற்கு அங்குள்ள அனைத்து தரப்பினரும் உலகினரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
அன்பு நேயர்களே, நீண்ட காலமாகச் சண்டைகள் இடம்பெற்றுவரும் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவச் செபிப்போம். சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் சண்டைக்கு விரைவில் நீதியான தீர்வு கிடைக்கட்டும். ஈராக்கில் இஞ்ஞாயிறன்றுகூட இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்புக்களில் 52 பேர் பலியாயினர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எனவே வருகிற வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை மேற்கொள்ளும் லெபனன் நாட்டுக்கான 24வது வெளிநாட்டுத் திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதி மக்களுக்கு அமைதிக்கான நம்பிக்கையைத் தரும் என நம்புவோம்.







All the contents on this site are copyrighted ©.