2012-09-10 17:17:19

திருத்தந்தை : வருங்காலம் ஒன்றிணைந்து வாழ்வதைச் சார்ந்துள்ளது


செப்.10,2012. நாம் வாழும் இந்த உலகத்துக்கு உண்மையிலேயே அமைதி தேவைப்படுகின்றது, அமைதி வரட்டும் என்ற ஓலம் நமது உலகத்தினின்று மிகவும் வலிமையாக எழும்பிக்கொண்டே இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
போஸ்னிய நாட்டு Sarajevoவில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 26வது அனைத்துலக அமைதி மாநாட்டுக்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே Sarajevo கர்தினால் Vinko Puljicவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sarajevoவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சண்டை எண்ணற்ற உயிரிழப்புக்களையும் பொருள்சேதங்களையும் கொண்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ள இச்செய்தி, முதல் உலகப்போர் தொடங்கிய இதே Sarajevoவில் மீண்டும் சண்டை இடம்பெற்றதால் துயரங்களை அனுபவித்த இந்நகரம், ஐரோப்பா முழுவதற்கும் துன்பத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று பாப்பிறை 2ம் ஜான் பால் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் வருங்காலம் ஒன்றிணைந்து வாழ்வதைச் சார்ந்துள்ளது என்றும், நாம் ஒருவர் ஒருவருக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய், ஒருவர் ஒருவருக்குத் தன்னையே வழங்கி வாழும் உணர்வில் அனைவரும் வளருமாறும் இச்செய்தியில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சான் எஜிதியோ என்ற இத்தாலிய கத்தோலிக்கப் பொதுநிலையினர் பிறரன்பு அமைப்பினால் நடத்தப்படும் இம்மாநாட்டில் ஏறக்குறைய 12 நாடுகளிலிருந்து சுமார் ஆயிரம் சமய மற்றும் பிற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். Sarajevo கைப்பற்றப்பட்டு போஸ்னியச் சண்டை தொடங்கியதன் 20ம் ஆண்டு நினைவாக இந்த அமைதி மாநாடு நடத்தப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.