2012-09-10 17:05:32

திருத்தந்தை : ஒரு சிறிய சொல் எல்லையற்ற பொருள் கொண்டது


செப்.10,2012 ஒரு மிகச் சிறிய சொல், இவ்வுலகில் கிறிஸ்துவின் மறைப்பணியைத் தொகுத்துத் தந்துள்ளது என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு குணமாக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை(மாற்கு7:31-37) மையமாக வைத்து மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, அந்த மனிதரிடம் இயேசு பேசிய “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்ற சொல்லின் பொருளை விளக்கினார்.
எப்பத்தா என்று இயேசு சொன்னவுடன் அந்த மனிதரின் காதுகள் திறக்கப்பட்டன, நாவும் கட்டவிழ்ந்தது, இந்தக் குணப்படுத்தலால் அந்த மனிதர் உடனே பிறருக்கும் உலகினருக்கும் திறந்த உள்ளம் கொண்டவரானார், அவரால் புதிய வழியில் மற்றவரோடு தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.
காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்த நிலை அந்த மனிதரின் உடல் உறுப்புக்களை மட்டும் சார்ந்த்தாக இல்லாமல், அவரது அகவாழ்வையும் மூடியிருந்ததை நாம் அறிகிறோம் என்ற திருத்தந்தை, பாவத்தால் அகவாழ்வில் காது கேளாமலும், பேச முடியாமலும் இருக்கும் மனிதர் இறைவனின் குரலைக் கேட்குமாறுச் செய்வதற்கு இயேசு மனிதனானார் என்று கூறினார்.
மேலும், குணமடைந்த இந்த மனிதர் அன்பின் குரல் பேசுவதைத் தனது இதயத்தில் கேட்கவும், இறைவனோடும் மற்றவரோடும் தொடர்பு கொள்வதற்கு அன்பின் மொழியைப் பேசுவதற்குக் கற்றுக்கொள்ளவும் இயேசு மனிதனானார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இதனாலே திருமுழுக்குத் திருவருட்சாதனச் சடங்கில் எப்பத்தா என்ற அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இவ்வருட்சாதனத்தின் மூலம் மனிதர் தூய ஆவியை சுவாசித்து பேசுவதற்குத் தொடங்குகிறார் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.