2012-09-10 17:04:25

கொலம்பியாவில் நற்செய்தியை விதைத்து ஒப்புரவை அறுவடை செய்ய திருத்தந்தை அழைப்பு


செப்.10,2012. வன்முறையின் தழும்புகள் பரவியுள்ள கொலம்பியாவில் ஊக்கமளிக்கும் சில அடையாளங்கள் தெரிகின்ற போதிலும், அந்நாட்டில் இன்னும் இடம்பெற்றுவரும் வன்முறைகள், பல மக்களுக்கு வேதனையையும், தனிமையையும் மரணத்தையும் அநீதியையும் தொடர்ந்து வருவித்துக் கொண்டிருக்கின்றன எனக் கவலை தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் இரண்டாவது குழு ஆயர்களை, அட் லிமினா சந்திப்பையொட்டி காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இத்திங்களன்று சந்தித்த திருத்தந்தை, பல இன்னல்கள் மற்றும் ஆபத்துக்கள் மத்தியில் ஆயர்கள் ஆற்றிவரும் மேய்ப்புப்பணிகளைப் பாராட்டிப் பேசியதோடு மனித வாழ்வுக்கு ஆதரவான பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறும் பரிந்துரைத்தார்.
நம் ஆண்டவராம் மீட்பரின் எடுத்துக்காட்டு மற்றும் அவரது அருளிலிருந்து திடம் பெற்று அமைதிக் கலாச்சாரத்தையும் மனித வாழ்வையும் பாதுகாப்பதற்குத் தொடர்ந்து செயல்படுமாறும் தான் சந்தித்த 37 ஆயர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
கிறிஸ்து எங்கெல்லாம் வருகிறாரோ அங்கெல்லாம் அவர் இணக்க வாழ்வுக்கானப் பாதையைத் திறக்கிறார் என்பதை அறிந்தவர்களாய் நற்செய்தியை விதைத்து ஒப்புரவை அறுவடை செய்யுமாறும் ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை.
வெறுப்பு இருக்குமிடத்தில் மன்னிப்புக்கும் பகைமை இருக்குமிடத்தில் சகோதரத்துவத்துக்கும் கிறிஸ்து பாதையைத் திறக்கிறார் என்ற திருத்தந்தை, நற்செய்திப்பணியில் புதிய முறைகளை ஊக்குவிக்குமாறும் கொலம்பிய ஆயர்களைக் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.