2012-09-08 14:09:15

திருத்தந்தையின் திருப்பயணத்திற்காக லெபனன் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இணைந்து செபம்


செப்.08,2012. லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையின் திருப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு இறைவன் மற்றும் அன்னைமரியாவின் பாதுகாப்பை இறைஞ்சி அந்நாட்டுக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் திருவிழிப்பு செபம் ஒன்றை நடத்தவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை லெபனன் நாட்டுக்குச் செல்லவிருப்பதையொட்டி, வருகிற புதன்கிழமையன்று, தலைநகர் பெய்ரூட்டின் நான்கு இடங்களிலிருந்து மெழுகுதிரிகள் மற்றும் லெபனன் கொடிகளுடன் ஊர்வலமாகப் புறப்படும் இளையோர் அந்நகரின் மரியா பூங்காவில் இரவு 8 மணியளவில் ஒன்று சேருவார்கள். பின்னர் செபங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அருள்பணி Antoine Daou கூறினார்.
இந்தச் செப வழிபாடு குறித்துப் பேசிய லெபனன் ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுச் செயலர் அருள்பணி Daou, இந்த நாள் தேசிய விடுமுறை நாள் என்றும், லெபனனில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்கின்றது என்பதை இச்செப நிகழ்வு மூலம் உலகுக்கு உணர்த்த விரும்புவதாகவும் கூறினார்.
அமைதி, அன்பு, சுதந்திரம், பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இச்செப நிகழ்வில் அந்நாட்டின் சமயக் குழுக்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், இன்னும் ஆயிரக்கணக்கான விசுவாசிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.