2012-09-06 15:07:33

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பாகிஸ்தானிலிருந்து ஒரு கிறிஸ்தவரும் பங்குபெறுவது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையின் அடையாளம்


செப்.06,2012. இலண்டனில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து சென்றுள்ள வீரர்கள் மத்தியில் ஒரு கிறிஸ்தவரும் இடம்பெற்றிருப்பது அந்நாட்டைக் குறித்து நம்பிக்கையை உருவாக்குகிறது என்று லாத்தரன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் Mobeen Shahid, கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி முடிய இலண்டன் நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க பாகிஸ்தானிலிருந்து சென்றுள்ள வீரர்களில் Naeem Masih என்ற கிறிஸ்தவரும் பங்கேற்று வருகிறார்.
கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த Naeem Masih ஒரு விபத்தில் தன் கையை இழந்தபின், ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட்டார்.
இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1500 மீட்டர் பந்தயத்தில் இவர் பதக்கத்தை வெல்லவில்லையெனினும், அடுத்த ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வெல்லும் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறுமி Rimsha Masih, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுபோல், Naeem Masihயின் பங்கேற்பு சரியான வழிகளில் உலகின் கவனத்தைப் பாகிஸ்தான் மீது திருப்பியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.