2012-09-06 15:08:59

இல்லப்பணியாளர்கள் குறித்த சட்டங்கள் வருகிற ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் : ஐ.நா.


செப்.06,2012. இல்லங்களில் வேலைகள் செய்யும் பணியாளர்களின் உரிமைகளை உலகெங்கும் நிலைநாட்டும் சட்டங்கள் வருகிற ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
இல்லப் பணியாளர்களின் உரிமைகள் பற்றிய சட்டங்களை ஐ.நா.வின் அகில உலக தொழிலாளர் நிறுவனமான ILO சென்ற ஆண்டு ஜெனீவாவில் உருவாக்கியது.
இச்சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் இரண்டாகிலும் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட இச்சட்டங்களுக்கு இவ்வாண்டு ஜூன் மாதம் Uruguay நாடு ஒப்புதல் தெரிவித்தது.
இப்புதனன்று பிலிப்பின்ஸ் நாடு இச்சட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவித்ததால், தற்போது இச்சட்டம் அனைத்துலகிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று ILO தலைமை இயக்குனர் Juan Somavia செய்தியாளர்களிடம் கூறினார்.
அண்மைய ILO கணக்கெடுப்பின்படி 117 நாடுகளில் 5 கோடியே, 30 இலட்சம் இல்லப்பணியாளர்கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது. ஆயினும், உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நிலையில் இல்லப்பணிகள் செய்து வருகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கூறி வருகின்றனர்.
ILOவின் இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், வேலை நேரங்கள், கொடுக்கப்படும் ஊதியம், விடுமுறைகள், உடல்நலத் தேவைகள் என்ற அனைத்து அம்சங்களிலும் இல்லப்பணியாளர்கள் பாதுகாக்கப்படுவர் என்று ILO செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.