2012-09-05 15:58:48

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : ஆப்ரிக்க மக்களின் ஆன்மீக வளங்கள் இந்தக் காலத்திற்கு விலைமதிப்பற்றவை


செப்.05,2012. “நம்பிக்கையின் கண்டமாக” நோக்கப்படும் இன்றைய ஆப்ரிக்காவில் பொதுநிலை விசுவாசிகளின் மறைப்பணி ஊக்குவிக்கப்பட வேண்டும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
“இன்றைய ஆப்ரிக்காவில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சாட்சிகள்: நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்(மத்.5:13,14)” என்ற தலைப்பில் ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டு யவுண்டேயில் திருப்பீடப் பொதுநிலையினர் அவை நடத்தும் கருத்தரங்கிற்கு இப்புதனன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
ஆப்ரிக்கா, “நம்பிக்கையின் கண்டமாக” இருப்பதற்கு அழைக்கப்படுகிறது என்று அக்கண்டத்திற்குத் தான் திருப்பயணங்களை மேற்கொண்ட போதெல்லாம் உறுதிபடச் சொல்லியதை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஆப்ரிக்காவில் தற்போது நிலவும் பிரச்சனைகள் கடுமையானவை மற்றும் அவைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியாது என முதலில் அவற்றை நோக்கும் போது தோன்றுகின்றது, ஆயினும், ஆப்ரிக்க மக்களின் வாழ்வை மிக ஆழமாக நோக்கும்போது, அம்மக்களில் அளப்பரிய ஆன்மீக வளங்களைக் காண முடிகின்றது, அவை நமது இந்தக் காலத்திற்கு விலைமதிப்பற்றவை எனக் கூறினார்.
ஆப்ரிக்கப் புனிதை ஜோஸ்பின் பக்கித்தா பற்றியும் குறிப்பிட்ட அவர், கிறிஸ்துவோடு கொள்ளும் உறவு, தீர்க்க முடியாதவை எனத் தோன்றும் கடும் இன்னல்களையும் மேற்கொள்ள உதவுகின்றது எனவும் கூறினார்.
நற்செய்தி அறிவிப்புக்குப் புதிய முறைகளைக் கையாளுதல் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் மற்றும் விசுவாச ஆண்டு தொடங்கவிருக்கும் தருணத்தில் யவுண்டேயில் இடம்பெற்றுவரும் இக்கருத்தரங்கு இவற்றுக்குத் தயாரிப்பாக இருக்கிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, இன்றைய ஆப்ரிக்க மக்கள் அனைவரும் நற்செய்தியின் தூதர்களாக வாழுமாறு கேட்டுள்ளார்.
திருப்பீடப் பொதுநிலையினர் அவை நடத்தும் இக்கருத்தரங்கு வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.