2012-09-05 16:05:34

டிஜிட்டல் உலகில் ஆசியத் திருஅவையையும் பங்குகளையும் கட்டியெழுப்புதல்


செப்.05,2012. டிஜிட்டல் உலகத்தில் வாழும் இன்றைய இளையோரை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணிகளில் ஆசியத் திருஅவை மிகுந்த அக்கறை காட்ட வேண்டுமென அருட்பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணன், ஆசியக் கூட்டமொன்றில் கூறினார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் BISCOM என்ற சமூகத்தொடர்பு ஆணையம் நடத்தி வரும் கூட்டத்தில் இச்செவ்வாய் மாலை உரையாற்றிய அருட்பணி செபஸ்தியான், டிஜிட்டல் உலகில் ஆசியத் திருஅவையையும் பங்குகளையும் கட்டியெழுப்புதல் குறித்துப் பேசினார்.
பங்குகளின் சமூக-மேய்ப்புப்பணி மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகள் குறித்த செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதற்கு இணையதளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அருட்பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணன் பங்களூரு புனித பேதுரு இறையியல் கல்லூரியின் முன்னாள் இயக்குனர் மற்றும் அக்கல்லூரியில் தற்போது சமூகத்தொடர்புத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்.
மறைந்த இயேசு சபை கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி பற்றி அடிக்கடி தனது உரையில் அருட்பணி செபஸ்தியான் குறிப்பிட்டதாக, இக்கூட்டத்தில் பங்குகொள்ளும் வத்திக்கான் வானொலியின் இயேசு சபை அருள்தந்தை Joseph Paimpalli செய்தி அனுப்பியுள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் இக்கூட்டத்தில் 12 தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து 14 ஆயர்கள் உட்பட 45 பேர் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.