2012-09-05 16:02:39

இந்தியாவில் பெண்சிசுக்கொலைகளுக்கு எதிராகச் செயல்பட அன்னை தெரேசா தூண்டுகின்றார்


செப்.05,2012. பாலியல்ரீதியாகப் பிரித்துப் பார்க்கப்பட்டு நடத்தப்படும் கருக்கலைப்புக்கள், பெண்சிசுக்கொலைகள், சிசுக்கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அருளாளர் அன்னை தெரேசாவின் நல்லுணர்வுகள் நம்மைத் தூண்டுகின்றன என்று பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 5, இப்புதனன்று, அருளாளர் அன்னை தெரேசாவின் விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கூறிய பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர் டாக்டர் பாஸ்கால் கர்வாலோ, இந்தியச் சமுதாயத்தில் இடம்பெற்று வரும் பெண்சிசுக்கொலைகள் குறித்து சிந்திப்பதற்கு இவ்விழா அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
ஒவ்வொரு மனிதர் மீது அன்னை தெரேசா வைத்திருந்த அன்பு, மனித மாண்பு மதிக்கப்படுவதற்காக அவர் குரல் கொடுத்தது, மனித வாழ்வின் புனிதம் அதன் தொடக்கமுதல் இறுதிவரை காப்பாற்றப்படுவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் ஆகிய அனைத்திற்காகவும் அன்னை தெரேசா இந்தியாவிலும், உலகெங்கிலும் மதிக்கப்படுகிறார் என்றும் கர்வாலோ தெரிவித்தார்.
இதனாலே மரணக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒவ்வொரு செயலுக்கு எதிரானப் போராட்டத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கு அன்னை தெரேசா இறந்த நாளும் அவரது திருநாளும் நல்ல தருணங்களாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.