2012-09-04 15:40:49

லெபனன் மக்கள் வேறுபாடுகளைக் களைந்து திருத்தந்தையை வரவேற்குமாறு மாரனைட்ரீதி தலைவர் வேண்டுகோள்


செப்.04,2012. லெபனன் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைந்து, அன்பு மற்றும் உண்மையுடன் தங்கள் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையை வரவேற்குமாறு கேட்டுள்ளார் அந்நாட்டு மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Bechara Rai.
லெபனன் மக்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள், அந்நாட்டுக்குத் இம்மாதம் 14 முதல் 16 வரை திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை வரவேற்பதற்குத் தடையாய் இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் முதுபெரும் தலைவர் Rai.
வத்திக்கானில் 2010ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடுவது திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
லெபனன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 59.7 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 21 விழுக்காட்டினர் மாரனைட்ரீதி கத்தோலிக்கர். 8 விழுக்காட்டினர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினர். 5 விழுக்காட்டினர் கிரேக்கரீதிக் கத்தோலிக்கர். 7 விழுக்காட்டினர் பிற கிறிஸ்தவ சபையினர். இவர்களில் அர்மேனிய ரீதிக் கிறிஸ்தவர்கள் 4 விழுக்காட்டினர்.







All the contents on this site are copyrighted ©.