2012-09-04 16:30:22

செப்டம்பர் 05, விவிலியத் தேடல் - திருப்பாடல் 133 : பகுதி 3


RealAudioMP3 சரியாக 15 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அன்னை தெரேசா இறையடி சேர்ந்தார். சேரிகளின் வானதூதர், சமாதானப் புறா, உலகத்தாய் என பல்வேறு புகழாரங்களால் சூட்டப்பட்ட இவ்வன்னையைத் தேடி, பல உலக விருதுகளும் வந்தன. இவற்றில் ஒன்று 1979ம் ஆண்டு இவர் பெற்ற நொபெல் உலக அமைதி விருது.
பொதுவாக நொபெல் விருது வழங்கப்படும் விழாவில் ஒரு விருந்தும் பரிமாறப்படும். அன்னை தெரேசா இந்த விருதைப் பெற்றபோது, அவர்கள் தரவிருந்த விருந்து வேண்டாம் எனக் கூறினார். அந்த விருந்துக்குச் செலவாகும் தொகையைத் தனக்குத் தந்தால், ஏழைகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். அவர் விருப்பப்படியே, அந்த விருந்துக்குத் திட்டமிடப்பட்ட 1,92,000 டாலர்கள், அதாவது, அன்றைய நிலவரப்படி, ஏறத்தாழ 67,20,000 ரூபாய் அவருக்குத் தரப்பட்டது.
இந்த விழாவுக்கு வந்திருந்த நிருபர்கள் அன்னையிடம், "அமைதியை வளர்க்க நாம் என்ன செய்யமுடியும்?" என்று கேட்டபோது, அன்னையவர்கள் மிகச் சுருக்கமான ஒரு பதிலைத் தந்தார். "உங்கள் இல்லங்களுக்குச் சென்று, உங்கள் குடும்பத்தினர் மீது அன்பு கொண்டிருங்கள்" என்று அவர் கூறினார். உலக அரசுகள் பற்றி, நாடுகளுக்கிடையே நிலவ வேண்டிய நல்லுறவுகள் பற்றி, போர், கலவரம், தீவிரவாதம் என்ற பல பிரச்சனைகள் பற்றி அன்னை பதில்சொல்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிருபர்கள் இந்த எளிமையானப் பதிலைக் கேட்டு வியந்தனர். அவர்களது வியப்பைக் கண்ணுற்ற அன்னை, தான் சொல்லவந்ததைத் தெளிவாக்கினார்:
"நான் உலகின் பல நாடுகளுக்கும் சென்றுள்ளேன். ஒவ்வொரு நாட்டிலும் பரவியிருக்கும் வறுமையைப் பார்த்திருக்கிறேன். வளர்ச்சி பெற்றுள்ள மேற்கத்திய நாடுகளில் பரவியிருக்கும் அன்பு வறுமை என்னை அதிகம் பாதிக்கின்றது. உடல் பசியாலும், வறுமையாலும் வாடும் ஒரு குழந்தையை நான் சந்திக்கும்போது, அக்குழந்தைக்கு உணவும், உறைவிடமும் கொடுத்து, அதன் பசியையும், பாதுகாப்பற்ற நிலையையும் என்னால் தீர்க்கமுடிகிறது. ஆனால், வளர்ச்சிபெற்ற நாடுகளில், குடும்பங்களில் நிலவும் அன்பு வறுமையைப் போக்க வழிதெரியாமல் நான் தவிக்கிறேன். உடலளவில் மனிதர்களைக் கொல்லும் உலகப் போர்களை நம்மால் தடுக்க முடியும். ஆனால், மனதளவில் மனிதர்களைக் கொல்லும் இந்த மௌனப் போர்களைத் தடுக்கமுடியாமல் நாம் தவிக்கிறோம்." என்று அன்னை கூறிய விளக்கம், அந்த அமைதி விருது விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் ஆழமாய்ப் பாதித்தது.
"உங்கள் இல்லங்களுக்குச் சென்று உங்கள் குடும்பத்தினர் மீது அன்பு கொண்டிருங்கள்" என்று அன்னை சொன்ன வார்த்தைகளுக்கு அவர் அளித்த விளக்கம் மனித குலத்திற்கு அடிப்படையான ஒரு பாடத்தைத் தந்தது. அன்னை சொன்ன அந்த ஆழமான உண்மையைப் போல, திருப்பாடல் ஆசிரியர் எளிமையான, அழகான ஓர் உண்மையை, திருப்பாடல் 133ன் ஆரம்பத்தில் சொல்கிறார்: சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! அருளாளர் அன்னை தெரேசாவின் திருநாளன்று நாம் திருப்பாடல் 133ன் வரிகளைச் சிந்திக்க வந்திருப்பதை நான் ஓர் அருள் நிறைந்த வாய்ப்பாகக் கருதுகிறேன்.

சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வதால் உருவாகும் நன்மையையும், இனிமையையும் விளக்க ஆசிரியர் இரு ஒப்புமைகளைக் கூறியுள்ளார்.
திருப்பாடல் 133
சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது... ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும். அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்.

சகோதர ஒன்றிப்பை விளக்க ஆசிரியர் பயன்படுத்தும் முதல் ஒப்புமை, நறுமணத் தைலம். இந்த ஒப்புமையில் மூன்று எண்ணங்கள் போதிந்துள்ளதைக் காணலாம். இறைவன் விரும்பித் தேர்ந்தவர்களைத் திருப்பொழிவு செய்வதற்கு நறுமணத்தைலம் பயன்படுத்தப்பட்டது. மனிதர்கள் ஒன்றுபட்டு வாழ்வதும் இறைவனின் விருப்பம் என்பதை ஆசிரியர் இந்த ஒப்புமையின் மூலம் சொல்கிறார். பொதுவாகவே, தைலம் குணமளிக்கும் குணம் கொண்டது. அதுபோல, ஒன்றித்து வாழும் மனித சமுதாயமும் குணம் பெறும், குணம் அளிக்கும். மூன்றாவது எண்ணம்... ஆரோனின் தலைமீது ஊற்றப்பட்ட நறுமணத்தைலம் அவர் மீது மட்டும் நறுமணம் வீசப்போவதில்லை, அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அந்த மணத்தை அனுபவிக்கமுடியும். இத்தைலத்தின் நறுமணம் காற்றில் கலந்து, வெகுநேரம் நீடிக்கும். அதேபோல், சகோதரர் ஒன்றுபட்டு வாழும்போது உருவாகும் அன்புமணம் அருகில் உள்ளவர்களையும் நல்ல அனுபவங்களால் நிறைத்து, நீண்டகாலம் நீடிக்கும் என்பதை ஆசிரியர் இந்த ஒப்புமை வழியாகக் கூற முயல்கிறார்.

திருப்பாடல் ஆசிரியர் பயன்படுத்தும் இரண்டாவது ஒப்புமை எர்மோனின் மலைப்பனி... பொதுவாகவே தண்ணீர் உயிர்தரும் ஓர் அடையாளம் என்பதை நாம் அறிவோம். ஏனையக் கோளங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, அங்கு ஏதாவது ஒரு வடிவில் தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வு கட்டாயம் மேற்கொள்ளப்படும். நீர், பனி, நீராவி, காற்றில் ஈரப்பசை என்று ஏதாவது ஒரு வடிவத்தில் தண்ணீர் இருப்பதாகத் தெரிந்தால், அங்கு கட்டாயம் உயிர்கள் வாழமுடியும் என்ற முடிவுகள் வெளியாகும். பனி சூழ்ந்த மலை உயிர்கள் தழைக்க ஓர் ஆதாரம் என்ற நம்பிக்கையில்தான் திருப்பாடல் ஆசிரியர் சகோதர ஒன்றிப்பை மலைப்பனிக்கு ஒப்பிடுகிறார்.

பொதுவாகவே வறட்சியை அதிகம் காணும் நிலப்பரப்பான இஸ்ரயேல் நாட்டில் மலைப்பனியும், மழையும் மக்கள் பெரிதும் வரவேற்ற அடையாளங்கள். பாலஸ்தீன நிலப்பரப்பில், எர்மோன் மலை மிக உயர்ந்த இடம். எர்மோன் மலையில் பனி விழுந்து, மலைமுகடு வெள்ளைப் போர்வையால் மூடப்பட்டிருந்தால், அந்தக் காட்சி நூறு மைல்கள் சுற்றளவில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். எர்மோன் மலையில் பனி இறங்கியுள்ளது என்பதைச் செய்தியாக அறிவிக்கவோ, விளம்பரப்படுத்தவோ தேவையில்லை. மலைச் சிகரத்தில் பனி சூழ்ந்தால், வறட்சி நீங்கி, வளமை சேரும் என்பதையும் யாரும் விளக்கத் தேவையில்லை. சிறு குழந்தையும் அதை எளிதாகப் புரிந்துகொள்ளும். மனிதர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்தால், எவ்வித விளம்பரமும் இன்றி அந்த ஒன்றிப்பும், அதன் விளைவுகளும் சமுதாயத்தில் உணரப்படும்.

மலை மீது வந்திறங்கும் பனியின் மற்றொரு குணம் அதன் நீடித்த பயன்... மலைப்பனி, இன்று தோன்றி நாளை மறையாமல், நின்று நிலைத்து நெடுநாட்கள் நீர் வழங்கும். சகோதர ஒன்றிப்பும், அதேபோல் பலநாட்கள், பல ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். இவ்விதம், சகோதர ஒன்றிப்பின் நன்மையை, இனிமையை திருப்பாடல் ஆசிரியர் நறுமணத் தைலம், மலைப்பனி என்ற இரு ஒப்புமைகள் வழியே கூறியுள்ளார்.

வானின்று இறங்கும் பனி இறையாசீரைச் சுமந்துவரும் என்பதை விவிலியத்தின் பல பகுதிகளில் நாம் காணலாம். இதோ, சில இறைசொற்றோடர்கள்:
தொடக்கநூல் 27: 28,
ஈசாக்கு ஆசி வழங்கி உரைத்தது இதுவே: வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!
எசாயா 26: 19,
இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்: அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்: புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி: இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர்.
ஒசேயா 14: 5
நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்: அவன் லீலிபோல் மலருவான்: லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான்.

கிறிஸ்தவத்தின் ஆரம்பக் காலத்தில் சகோதர ஒன்றிப்பு அதன் இலக்கணமாகத் திகழ்ந்தது. இந்த ஒன்றிப்பை மக்கள் அனைவரும் கண்டு அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தனர் என்பதை திருத்தூதர் பணிகள் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
திருத்தூதர் பணிகள் 4: 32-35
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்: அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
கிறிஸ்துவத்தின் ஆணி வேர்களான ஒன்றிப்பும், சமத்துவமும் மீண்டும் உலகெங்கும் உயிர்பெற்று எழவேண்டும் என்ற ஆவலைத் திருப்பாடல் 133 நம்முள் எழுப்புகிறது.

எருசலேம் கோவிலை நோக்கி இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் பயன்படுத்தப்பட்ட 15 பாடல்களை நாம் கடந்த 18 வாரங்களாக சிந்தித்தோம். இந்தப் பயணத்தை இன்று நிறைவு செய்கிறோம். எருசலேம் கோவிலை அடைந்துவிட்ட மக்களுக்கு 133, 134 ஆகிய இறுதித் திருப்பாடல்களில் கூறப்பட்டுள்ள ஆசீர் வார்த்தைகளுடன் இத்திருப்பயணத்தை நாம் நிறைவு செய்வோம்:
சீயோனின் மலைகள்மேலிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார். (திருப்பாடல் 133)
ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள். தூயகத்தை நோக்கி கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள். விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக! (திருப்பாடல் 134)








All the contents on this site are copyrighted ©.