2012-09-01 14:03:53

கவிதைக் கனவுகள் - மாறாதவைகள்


கவிதைச் சாலை என்ற வலைத்தளத்தில் சேவியர் தாசய்யன் எழுதிய கவிதை

எடைகள் எப்போதும்
நியாயமாய் இருந்ததில்லை
எனினும்
‘நியாய விலைக் கடை’கள்
பெயர் மாற்றிக் கொள்ளவில்லை.

பாதி அளவுக்கே இருக்கிறது
நீதி,
ஆனாலும் நீதிபதிகள்
‘நீதிபாதி’கள்
என அழைக்கப்படவில்லை.

ஜனங்களை விட அதிகமாய்
இருக்கைகளைப் பற்றியே
இருக்கின்றன அரசுகள்,
ஆனாலும்
சாசனங்கள் பெயர்மாறி
ஆசனங்கள் ஆகவில்லை.

பிடுங்கல்களைக் கூட
‘தட்சணை’கள் என்றே
வரன் வீட்டுச்
சவரன்கள் வாயாரச் சொல்கின்றன.

என்ன சொல்வது?
மரணத்தைக் கூட
மறுவீட்டுப் பிரவேசம் என்று
அன்போடழைத்தே
பழக்கப் பட்டவர்கள் நாம்.

பெயர்களில் என்ன இருக்கிறது
வேர்களில்
வித்யாசம் இல்லா ஊர்களில்?








All the contents on this site are copyrighted ©.