2012-09-01 10:11:13

கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்


செப்.01,2012. இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 22 ஆண்டுகள் பணியாற்றிய இயேசு சபை கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி தனது 85வது வயதில் இவ்வெள்ளி (ஆகஸ்ட் 31) பிற்பகலில் இறைபதம் அடைந்தார்.
கர்தினால் மர்த்தினி அவர்களின் இறப்பையொட்டி மிலானின் தற்போதைய பேராயர் கர்தினால் Angelo Scola அவர்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், "புனித லொயோலா இஞ்ஞாசியாரின் அன்புப் புதல்வராகிய இந்த அன்புச் சகோதரர், நற்செய்திக்கும் திருஅவைக்கும் தாராள உள்ளத்துடன் பணியாற்றியவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்தினால் மர்த்தினி, சிறந்த ஆசிரியர், விவிலிய நிபுணர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம் மற்றும் பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் அன்புக்குரிய அதிபர் என்றெல்லாம் தனது தந்திச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, அம்புரோசியன் மறைமாவட்டத்தின் ஞானமுள்ள மற்றும் ஊக்கம் தளராத பேராயர் என்றும் பாராட்டியுள்ளார்.
உண்மையுள்ள ஊழியர் மற்றும் தகுதியுடைய ஆயரை நம் ஆண்டவர் விண்ணக எருசலேமுக்குள் அழைத்துக் கொள்ள வேண்டுமென்று புனித கன்னிமரியின் பரிந்துரை மூலம் செபிக்கின்றேன் எனவும், கர்தினால் மர்த்தினியின் இறப்பால் வருந்தும் அனைவருக்கும் தனது ஆறுதலை கனிவோடு அளிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கர்தினால் மர்த்தினியின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 206 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 118 ஆகவும் மாறியது.








All the contents on this site are copyrighted ©.