2012-09-01 14:44:30

கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்புக்குத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்


செப்.01,2012. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்பு, இத்தாலியத் தலத்திருஅவைக்கும் அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் மட்டுமல்லாமல் இத்தாலி நாட்டுக்கும் பெரும் இழப்பு என்று இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitano தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனது இத்தாலிய நாட்டுக்கு மகனாகவும், தனது வாழ்வின் பெரும் பகுதியை போதிப்பதிலும் அர்ப்பணத்துடன் செயல்நடுவதிலும் செலவழித்த கர்தினால் மர்த்தினி தனது மேய்ப்புப்பணியின் மூலம் சமூக வாழ்வில் மிகுந்த தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் நாப்போலித்தானோ கூறியுள்ளார்.
கர்தினாலின் ஞானமும் உலகளாவிய கண்ணோட்டமும் கிறிஸ்தவத்தின் மிகப்பரந்த தன்னமையைக் காட்டி மதங்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட உரையாடலுக்குப் பாதை அமைத்தன என்றும், அவர் தனது இறுதிக் காலத்தில் நோயால் துன்புறும்போதும்கூட தனது மிகச்சிறந்த அறிவுக்கூர்மை மற்றும் நன்னெறி வாழ்வால் இத்தாலியர்களிடம் பேசி வந்தார் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
கர்தினால் மர்த்தினியுடன் நடத்திய பல தனிப்பட்ட சந்திப்புக்களையும் இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitano நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், கர்தினால் மர்த்தினியின் இறப்பு, பெரியதொரு மிலான் உயர்மறைமாவட்டத்தையும் கடந்து பலரின் உள்ளத்தைப் பெரிதும் தொட்டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இன்னும், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco, புனிதபூமி காவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை Pierbattista Pizzaballa, மிலான் யூதமதத் தலைவர் பேராசிரியர் Giuseppe LARAS, MEIC என்ற இத்தாலிய கத்தோலிக்க கலாச்சார இயக்கம், கத்தோலிக்க இயக்கம் எனப் பல இத்தாலிய தேசிய இயக்கங்கள் ஆகிய அனைவரும் கர்தினால் மர்த்தினியின் இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்தினால் மர்த்தினியின் அடக்கச்சடங்கு திருப்பலி செப்டம்பர் 3, வருகிற திங்களன்று மிலான் பேராலயத்தில் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு நடைபெறும்.







All the contents on this site are copyrighted ©.