2012-09-01 14:52:41

உலகில் மரணதண்டனைகள் நிறுத்தப்பட ஐ.நா.கோரிக்கை


செப்.01,2012. காம்பியா, ஈராக், தென்சூடான் ஆகிய நாடுகளில் அண்மையில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது, உலகில் பல நாடுகளில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதில் தீவிரம் காட்டப்படுவதை வெளிப்படுத்துகின்றன என்று ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றுவதைச் சட்டத்திலிருந்து நீக்குவதற்கு இதுவரை ஆப்ரிக்கக் கண்டத்தில் முன்னணியில் நின்ற காம்பிய நாடு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கடந்த வாரத்தில் ஒன்பது கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதைக் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனப் பேச்சாளர் Rupert Colville.
காம்பியாவிலுள்ள அனைத்து மரணதண்டனை கைதிகளுக்கும் இந்த செப்டம்பர் பாதிக்குள் அத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டுமென அந்நாட்டு அரசுத்தலைவர் Yahya Jammeh அறிவித்த சில நாள்களுக்குள் ஒன்பது கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஈராக்கில் இந்த 2012ம் தொடங்கியதிலிருந்து 96 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் இந்த ஆகஸ்டில் மட்டும் 26 பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் Colville கூறினார்.
ஐ.நா.வின் 150 உறுப்பு நாடுகள் சட்டத்தில் அல்லது நடைமுறையில் மரணதண்டனைகளை இரத்து செய்துள்ளன அல்லது தண்டனை காலத்தை மாற்றியுள்ளன என உரைத்த Colville, உலகில் மரணதண்டனைகள் முழுவதுமாக நிறுத்தப்படுமாறு மீண்டும் ஐ.நா. கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
உலக அளவில் பார்க்கும்போது இத்தண்டனை வழங்குவது குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.