2012-08-31 15:53:24

“சீனாவின் புனித ஜெரோமுக்கு” வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் பட்டம்


ஆக.31,2012. ”சீனாவின் புனித ஜெரோம்” என அழைக்கப்படும் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை இறையடியார் Gabriele M. Allegra, வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவார் என பிரான்சிஸ்கன் சபை தலைமையகம் அறிவித்துள்ளது.
புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குப் பொறுப்பான திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, இறையடியார் Allegraவை அருளாளர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை நிகழ்த்துவார் என்று பிரான்சிஸ்கன் தலைமையகம் கூறியதாக ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.
சீனாவிலும் ஹாங்காங்கிலும் மறைப்பணியாளராகப் பணியாற்றிய இறையடியார் Allegra, விவிலியத்தை சீன மொழியில் மொழிபெயர்த்ததில் புகழ்பெற்று விளங்குகிறார்.
1907ம் ஆண்டு இத்தாலியின் Catania மாநிலத்தில் St. Giovanni La Punta என்ற ஊரில் பிறந்த Gabriele M. Allegra, 1930ம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் குருவாகி அதற்கு அடுத்த ஆண்டில் சீனா சென்றார். சீன மொழியில் விவிலியத்தை மொழி பெயர்க்க வேண்டுமென்பதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஷங்கையில் சீன மொழியைக் கற்ற பின்னர் 1944ம் ஆண்டில் சிலருடன் சேர்ந்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். பின்னர் சீனாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் 1949ம் ஆண்டில் ஹாங்காங் சென்றார். 1968ம் ஆண்டில் சீன மொழியில் முழு விவிலியத்தையும் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1971ம் ஆண்டில் சீன மொழியில் விவிலிய அகராதியை வெளியிட்டார். 1976ம் ஆண்டில் ஹாங்காங்கில் உயிர் துறந்தார்.
பிறரன்பு மற்றும் மெய்ஞானத்தின் மாபெரும் மனிதர் என அனைவராலும் போற்றப்படுகிறார் அருள்தந்தை Gabriele M. Allegra. இவர் 1994ம் ஆண்டில் இறையடியார் என அறிவிக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.