2012-08-31 15:39:20

முதுபெரும் தலைவர் Twal : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம், அப்பகுதி முழுவதற்குமானத் திருப்பயணம்


ஆக.31,2012. செப்டம்பர் 14 முதல் 16 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாட்டுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி முழுவதற்கும் மேற்கொள்ளும் திருப்பயணமாக அமைகின்றது என எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தலைவர் Twal, 2010ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடுவதாக இப்பயணத்தின் ஒரு பகுதி அமையும் என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களின் தலைவர்களிடம் இத்தீர்மானத்தொகுப்பு ஏடுகளைத் திருத்தந்தை இத்திருப்பயணத்தில் வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
யூதர்களுடன் உரையாடல் நடத்துவதற்கு நன்மனம் கொண்ட மனிதர்கள் இருக்கின்றபோதிலும், யூதர்களுடனான உரையாடலில் அவ்வளவாக முன்னேற்றம் காணப்டவில்லையெனவும் முதுபெரும் தலைவர் Twal கூறினார்.
தற்போது சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறை குறித்த கவலையையும் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.