2012-08-30 15:33:27

புரட்சிக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருப்பதற்குக் கொலம்பிய ஆயர் பேரவை மகிழ்ச்சி


ஆக.30,2012. 'மக்கள் படை' என்றழைக்கப்படும் FARC என்ற கொலம்பியப் புரட்சிக் குழுவினருடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தைகளைத் துவக்க விருப்பம் தெரிவித்துள்ளதை அந்நாட்டில் உள்ள ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
நாட்டின் அமைதியை வளர்ப்பதற்கு, கொலம்பிய அரசுத் தலைவரும், அரசு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால் மக்கள் கவலையின்றி வாழ வழி பிறந்துள்ளது என்று கொலம்பிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ruben Salazar கையெழுத்திட்டு அனுப்பியுள்ள செய்தியில், ஆயர்கள் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்துள்ள இந்த அழைப்புக்குத் தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ள ஆயர்கள், மன்னிப்பும், ஒப்புரவுமே இந்நாட்டில் அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்று கூறியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் அரசுக்கும் FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே முதன்முறையாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பேச்சுவார்த்தைகள் Oslo நகரில் வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.