2012-08-30 15:38:33

நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் உரையாற்ற விருப்பமில்லை - பேராயர் Desmond Tutu


ஆக.30,2012. நன்னெறியும், தலைமைப் பண்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; எனவே, நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் தான் உரையாற்ற விரும்பவில்லை என்று முன்னாள் ஆங்கிலிக்கன் பேராயர் Desmond Tutu கூறினார்.
தலைமைப் பண்புத் தேடல் உச்சி மாநாடு (The Discovery Invest Leadership Summit) ஒன்று இவ்வியாழனன்று தென் அப்பிரிக்காவின் Johannesburg நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்ற பிரித்தானிய முன்னாள் பிரதமர் Tony Blairம், ஆங்கலிக்கன் பேராயர் Desmond Tutuவும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அமைதிக்கான நொபெல் பரிசை வென்றுள்ள பேராயர் Desmond Tutu, அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் சேர்ந்து பிரித்தானிய அரசும் ஈராக்கில் மேற்கொண்ட இராணுவ ஊடுருவலும், ஆக்கிரமிப்பும் நன்னெறி விழுமியங்களுக்கு முரணானது என்ற தன் கண்டனத்தைக் கூறிவந்தவர்.
பிரித்தானிய அரசின் அன்றையப் பிரதமராக இருந்த Tony Blairஉடன் ஒரே மேடையில் தோன்றி கருத்துக்களைப் பரிமாறத் தனக்கு விருப்பமில்லை என்று பேராயர் Tutu இச்செவ்வாயன்று அறிவித்தார்.
பேராயர் Tutu வெளியிட்ட இக்கருத்தைப் பாராட்டி, பல அமைதிக் குழுக்களும், இஸ்லாமிய குழுக்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.