2012-08-30 15:45:28

இலண்டனில் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவக்கம்


ஆக.30,2012. 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டன் மாநகரில் இப்புதனன்று மாலை ஆரம்பமானது.
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் தன் இரு கால்களையும் இழந்த ஒரு பிரித்தானிய இராணுவ வீரர் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்குபெற்ற இந்த ஆரம்பவிழாவின் இறுதியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
இரண்டாம் எலிசபெத் அரசியால் துவக்கிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் Stephen Hawking, மனிதர்களின் விடாமுயற்சிக்குத் தன் வணக்கத்தைக் கூறினார்.
இம்முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடுகளும் அதன் வீரர்களும் கலந்து கொள்வது, இந்தப் போட்டிகளுக்கு உலக அளவில் மேலும் ஒரு ஏற்றமும் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று விளையாட்டுச் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வழக்கமாக ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஐந்து வளையங்களுக்குப் பதிலாக, மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அடையாளமாக, மூன்று பிறை நிலா வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
"நான் நகர்கிறேன்" என்ற பொருள்படும் இலத்தீன் வார்த்தையான Agitos ஐக் குறிக்கும் இந்த பிறை வடிவங்கள் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் நிறங்களான பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் அமைந்துள்ளன.
இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டியதாகக் கூறும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இணையாக இந்த விளையாட்டுக்களும் அமையும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.