2012-08-30 15:40:16

அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டச் செய்தி


ஆக.30,2012. அணுசக்தி ஆய்வுகள் மனித குலத்தின் நலனுக்கும், உலக பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 29 இப்புதனன்று அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், பாதுகாப்பான உலகை உருவாக்கும் கடமை அனைத்து நாடுகளையும் சார்ந்தது என்று கூறினார்.
1991ம் ஆண்டு Kazakhstan நாட்டில் இருந்த Semipalatinsk என்ற ஒரு மாபெரும் அணு ஆய்வுக்களம் ஆகஸ்ட் 29ம் தேதி முற்றிலும் மூடப்பட்டதால், அந்நாளை அணு ஆய்வுகளுக்கு எதிரான நாளென்று ஐ.நா. அறிவித்தது.
அணு ஆய்வுகளால் இந்தப் பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் நாம் விளைவிக்கும் கேடுகளை அரசுகள் விரைவில் உணர்வது மிக்க அவசியம் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலர், அணு ஆய்வுகளுக்கு எதிராக இன்னும் முடிவெடுக்காத அரசுகள் விரைவில் அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
அணு ஆய்வுகளை நிறுத்தும் ஒரு தீர்மானத்தில் இதுவரை 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 157 நாடுகள் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியும் உள்ளன என்று ஐ.நா. அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.