2012-08-29 15:55:38

பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறாரை வேலையில் அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை


ஆக.29,2012. இந்தியாவில் பதினான்கு வயதிற்கு உட்பட்ட சிறாரை எந்த விதமான வேலையில் ஈடுபடுத்தினாலும், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என்பது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இச்செவ்வாயன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், 1986ம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத்தின்படி, ஆபத்தான அல்லது ஆபத்தற்ற எந்த விதமான தொழில்களிலும், 14 வயதிற்கு உட்பட்ட சிறாரை ஈடுபடுத்தக் கூடாது. அதை மீறினால் மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், சுரங்கம் போன்ற ஆபத்து நிறைந்த தொழில்களில் 18 வயதிற்குக் குறைவானவர்களை ஈடுபடுத்தவும் இந்தச் சட்ட மசோதா தடை விதிக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியாவில் தொழில் சட்டங்கள், ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாய் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.