2012-08-29 15:45:30

அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் : நியுயார்க் கர்தினால் கோரிக்கை


ஆக.29,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற நவம்பரில் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் தனிப்பட்ட விதத்தில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமென நியுயார்க் கர்தினால் Timothy M. Dolan கேட்டுக் கொண்டார்.
அந்நாட்டின் குடியரசு கட்சி, சனநாயக கட்சி ஆகிய இரண்டின் அரசுத்தலைவர், உதவி அரசுத்தலைவர் ஆகிய வேட்பாளர்கள், குடிமக்களுடன் உரையாடல் நடத்தும் மனுவில் கையெழுத்திடுமாறும் வலியுறுத்திய கர்தினால் டோலன், இந்த வேட்பாளர்கள் ஒருவர் மற்றவரின் சொந்த வாழ்க்கையைத் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளார்.
இந்த மிகப் பெரிய நாட்டின் வேட்பாளர்கள் இந்தத் தனது கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதனைத் தான் எழுதுவதாகக் கூறியுள்ள கர்தினால் டோலன், இவ்வாறு செயல்படுவதன் மூலம் தற்போது நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் வேட்பாளர்கள் கவனம் செலுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
சனநாயக கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Barack Obama, உதவி அரசுத்தலைவர் வேட்பாளர் Joe Biden, குடியரசு கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Mitt Romney, உதவி அரசுத்தலைவர் வேட்பாளர் Paul Ryan ஆகிய நால்வருக்கும் நியுயார்க் கர்தினால் எழுதிய கடிதங்களில் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இம்மனுவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.