2012-08-28 14:41:15

வெனெசுவேலா எண்ணெய் ஆலை தீ விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை அனுதாபம்


ஆக.28,2012. வெனெசுவேலா நாட்டின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, வெனெசுவேலா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Diego Rafael Padron Sanchezக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஆன்மீகரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனெசுவேலாவின் வடமேற்கிலுள்ள Falcón மாநிலத்தின் Amuay எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இம்மாதம் 25ம் தேதி அதிகாலை ஏற்பட்ட எரிவாயுக் கசிவால் தீப் பற்றிக் கொண்டது. இச்செவ்வாய் காலை நிலவரத்தின்படி இத்தீ விபத்தில் 3 சிறார் உட்பட 48 பேர் இறந்துள்ளனர் மற்றும் 80க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
கொளுந்து விட்டெரியும் தீயை அணைப்பதற்குத் தீயணைப்புப் படையினர் கடுமையாய் முயற்சித்துவரும்வேளை, அந்த ஆலை இச்செவ்வாயன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த Amuay ஆலை உலகின் மிகப்பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளுள் ஒன்றாகும். இந்தத் தீ விபத்தில் 209 வீடுகள், 11 கடைகள் எரிந்து நாசமாயின. 13 குடும்பத்தினரின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமாயின.







All the contents on this site are copyrighted ©.