2012-08-27 15:51:51

வாரம் ஓர் அலசல் – ஒரு சிறிய காலடியின் மாபெரும் சக்தி


ஆக.27,2012. RealAudioMP3 கண்மணி அதிகம் படித்தவரல்லர். ஆனால் வகைவகையான உணவுப் பண்டங்களைச் சமைப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவேண்டுமானால் அவர் கட்டாயம் வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை. அதற்கும் பல தடைகள் இருந்தன. இந்நிலையில் அவருடைய திருமண நாள் வந்தது. தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் கண்மணி. என்ன செய்யலாம் எனக் குடும்பத்தினரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் எல்லாரும் ஒருமித்த குரலில், “கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நீ செய்திருந்த அந்தப் புது வகையான இனிப்புப் பண்டத்தைச் செய்துவிடு” எனச் சொன்னார்கள். ஏனெனில் அந்த இனிப்பு குடுமபத்தினர் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது. கண்மணியும் தனது திருமண நாளில் மற்ற உணவு வகைகளோடு சேர்த்து இந்த இனிப்பையும் கொஞ்சம் அதிகமாகச் செய்து விருந்தினர்களுக்கு பரிமாறினார். விருந்தும் இனிதே முடிந்தது. அன்று விருந்துக்கு வந்தவர்களில் ஒருவர்கூட கண்மணியைப் பாராட்டாமல் அவ்வீட்டைவிட்டுச் செல்லவில்லை. நல்ல கைமணமுள்ள பெண்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர ஒரு போட்டி என்ற விளம்பரத்தை ஒரு நாள் பத்திரிகையில் தற்செயலாகப் பார்த்தார் கண்மணி. அந்தப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கண்மணியை வற்புறுத்தினர். எனவே வேறுவழியின்றி அவரும் அந்தப் போட்டியில் சேர்ந்தார். பலத்தப் போட்டிக்கு மத்தியில் அவர் முதல் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பரிசளிப்பு விழாவையொட்டி நடந்த கண்காட்சியில் ஒரு ஸ்டால் போடுவதற்கும் அனுமதி அளித்தனர். தனக்குத் தெரிந்த அந்த இனிப்பு வகையைச் செய்து அடுக்கி வைத்தார் கண்மணி. அனைத்தும் விற்றுத் தீர்ந்த பிறகு கிடைத்த இலாபம் அவருக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அப்புறம் என்ன? கண்மணியின் இந்த முதல் புதிய முயற்சி, இன்று ஐந்து, ஆறு பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்து அவர்களை வாழவைக்கும் மிகச் சிறந்த தொழில் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். ஒரு சிறு முயற்சி பெரும் சாதனைகளுக்கு வித்திடுகின்றது. நாடுகளின் சமூக, அரசியல், அறிவியல், பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையில் ஒருவர் துணிச்சலாக எடுத்து வைக்கும் ஓரடி, அந்நாடுகளின் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படிப் பெயர் சொல்ல குறைந்தது ஒருவராவது இருக்கிறார்கள். இஞ்ஞாயிறன்று பன்னாட்டு அளவில் எல்லாத் தினத்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பதிவாகியிருந்தது. அதனை வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நீங்களும் வாசித்திருப்பீர்கள். உலக வரலாற்றில் நிலவில் முதன் முதலில் கால்பதித்த முதல் மனிதர் Neil Armstrong இறைவனடி எய்தினார் என்பதுதான் அச்செய்தி. அமெரிக்க அறிவியலாளரான நீல் ஆம்ஸ்ட்ராங், Cincinnatiயில் ஆகஸ்ட் 25, இச்சனிக்கிழமை இரவு தனது 82வது வயதில் காலமானாžர். இம்மாதம் 5ம்தேதி தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடிய நீல் ஆம்ஸ்ட்ராங், அதற்கு இரண்டு நாள்கள் கழித்து இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதயத்துக்குச் செல்லும் நான்கு குழாய்களில் அடைப்பு இருந்து அதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆயினும் இச்சனிக்கிழமை இரவு அவர் காலமானார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனிதர்களின் இறப்புக்குத் தற்போது முதல் காரணமாக இருப்பது இதயம் சார்ந்த நோய்கள் என்று சொல்லும் மருத்துவர்கள், “இத்தகைய பொதுவான ஒரு நோயினால் ஆம்ஸ்ட்ராங் இறந்திருந்தாலும், அவர் சாதாரண மனிதருக்கும் அப்பாற்பட்டவர்; 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நிலவில் கால் வைத்த முதல் மனிதர்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர், "அடுத்த தடவை வானம் தெளிவாக இருக்கும் ஓர் இரவுப் பொழுதில் நீங்கள் வெளியே செல்கையில் நிலவைப் பார்க்கும்போது, நீல் ஆம்ஸ்ட்ராங்கை ஒருமுறை மனதில் நினைத்து கண் சிமிட்டுங்கள். நீல் ஆம்ஸ்ட்ராங் வெளிப்படுத்திய சேவை, சாதனை, எளிமை ஆகியவற்றை அமெரிக்கர்கள் மதித்துப் பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் Ohio மாநிலத்திலுள்ள Wapakoneta என்ற சிறிய நகரில் 1930ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பிறந்தவர் Neil Alden Armstrong. அவருக்கு June, Dean என்ற இரண்டு சகோதரர்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். தனது 30வது வயதில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி விமானியாக சேர்ந்தார் ஆம்ஸ்ட்ராங். விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் சேருவதற்கு முன் இவர் போர் விமானியாக இருந்து கொரியாவுக்கு எதிரான போரில் பங்கேற்றிருந்தார். 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்பல்லோ 11 என்ற அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கியது. அந்த நிலவுப் பயணத்துக்குத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், முதல் ஆளாக இறங்கி நிலவில் கால் வைத்து ஒட்டுமொத்த உலகையே சிலிர்க்க வைத்தார்.
ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த இருபது நிமிடங்களுக்குப் பின்னர் அவருடன் பயணித்த அறிவியலாளர் Buzz Aldrinம் நிலவில் காலடி எடுத்து வைத்தார். அந்த அப்பல்லோ 11 விண்கல ஓட்டுனர் Michael Collins நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தில் இருந்தார். ஆம்ஸ்ட்ராங்கும், Aldrinம் இரண்டரை மணிநேரம் நிலவில் நடந்து ஆராய்ச்சிகளுக்காக மாதிரிகளைச் சேகரித்ததுடன், பல புகைப்படங்களும் எடுத்தனர். தங்களின் சாதனையை நினைவு கூறும் வகையில் நிலவில் அமெரிக்கக் கொடியையும் நட்டு வைத்தார் ஆம்ஸ்ட்ராங். அன்று அவர்கள் நிலவில் நடந்த காட்சியை ஏறக்குறைய 50 கோடிப் பேர் தொலைக்காட்சியில் கண்டு வியந்தனர். தொலைக்காட்சி இல்லாதவர்கள் வானொலியில் அந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தனர். 1969ம் ஆண்டு முதல் இதுவரை 12 அமெரிக்கர்கள் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். ஆயினும் உலகினர் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ஆம்ஸ்ட்ராங் மட்டுமே என உறுதிபடச் சொல்ல முடியும். Collins மற்றும் Aldrinடன் சேர்ந்து அமெரிக்க அரசுத் தலைவர் Richard Nixonடமிருந்து சுதந்திரத்துக்கான அரசுத்தலைவர் பதக்கத்தைப் பெற்றார் ஆம்ஸ்ட்ராங். 1978ம் ஆண்டில் அரசுத்தலைவர் Jimmy Carterடமிருந்து அமெரிக்க காங்கிரஸ் அவையின் விண்வெளி பதக்கத்தைப் பெற்றார். இவர் 2009ம் ஆண்டில் அமெரிக்காவின் உயரிய விருதான தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.
RealAudioMP3 43 ஆண்டுகளுக்கு முன்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த சமயம் பேசிய இந்த வார்த்தைகள் ஆங்கில மொழியின் மிகப் பிரபலமான சொற்றொடர்களில் ஒன்றாக மாறியுள்ளன. “ஒரு சிறிய காலடி, மனித குலத்துக்கே ஒரு மாபெரும் முன்னேற்றம்”(One small step for a man, one giant leap for mankind). நிலவில் காலெடி எடுத்து வைத்த பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன இவரது கூற்று, 20ம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற கூற்றுக்களில் ஒன்றாகவும் மாறியது. “அன்று ஆம்ஸ்ட்ராங் நிலவில் எடுத்து வைத்த ஓர் அடி, மனித வரலாற்றின் போக்கையே மாற்றியுள்ளது. அந்த ஓர் அடி, மனித வரலாற்றின் புதிய யுகமாக மாறியுள்ளது. அவர் நிலவில் நடந்ததன் மூலம், வாழ்வின் புதிய பாதையைத் திறந்து வைத்தார்” என்று அமெரிக்கர்கள் போற்றுகின்றனர். “தனது சிறிய காலடி, மனித குலத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பிரம்மாண்ட முன்னேற்றம்” என ஆம்ஸ்ட்ராங் சொன்ன கூற்று அவர் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லையென, அது நடந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 1971ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆம்ஸ்ட்ராங், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் விமான-விண்வெளி பொறியியல் கல்வி ஆசிரியராக வேலை பார்த்துவந்தார். ஊடகங்களின் வெளிச்சத்திலிருந்து விலகி வாழ்வதை விரும்பியிருந்தார் ஆம்ஸ்ட்ராங். 1969ம் ஆண்டில் நடந்த இந்த மிகப் பெரிய சாதனை, இன்று செவ்வாய்க் கோளத்தில் கியூரியாசிட்டி விண்கலத்தை நிறுத்துமளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் இறப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா, "நீல் ஆம்ஸ்ட்ராங், அவரது காலத்துக்கு மட்டுமல்ல, எல்லாக் காலத்துக்குமே நாயகன்தான்" என்று புகழாராம் சூட்டியுள்ளார். அத்துடன், “அந்தச் சிறியக் காலடியின் வல்லமையை உலகுக்கு உணர்த்தியதற்காகவும்” ஆம்ஸ்ட்ராங்குக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஒபாமா.
ஒரு சிறிய காலடியின் மாபெரும் வல்லமையை உணர்ந்த பலர் தங்களது தளராத முயற்சியினால் நாடுகளின் முன்னேற்றத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். ஓர் எடுத்துக்காட்டுக்கு ஹோண்டா வாகனத் தயாரிப்பாளர் பற்றிச் சொல்லலாம். Soichiro Honda, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே சிறிது சிறிதாகப் பணம் சேர்த்தார். அதை வைத்து தனது 22வது வயதிலே வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழிற்சாலையை ஆரம்பித்தார். பின்னர் Toyota நிறுவனத்திடம் piston ringsஐ விற்பனை செய்வதற்காக 1937ம் ஆண்டில் தனது 31வது வயதில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினார். ஆனால் இரண்டாம் உலகப் போரில் அது பெருமளவில் சேதமடைந்தது. பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலுமாக அது தரைமட்டமானது. அப்போது ஹோண்டாவினால் தனது குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிவரக்கூட காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. மிதிவண்டியில் ஒரு மோட்டாரைப் பொருத்தி ஓட்டினார். அப்போதுதான் மோட்டார்களைத் தயாரிக்கும் கலை அவருக்கு ஒரு பொறியாகத் தட்டியது. முதலீடு பற்றாக்குறை இருந்தது. ஜப்பானிலிருந்த 18 ஆயிரம் வியாபாரிகளிடம் முன்பணம் கேட்டு எழுதினார். ஐந்தாயிரம் பேர் பணம் அனுப்பினர். முதலீடு தயாரானது. தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டது. இன்று ஹோண்டா நிறுவனத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். உலக நாடுகள்முன் ஜப்பான் தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஹோண்டா போன்றவர்களது சாதனைகளும் காரணமாகும்.
வாழ்க்கையில் சிகரத்தைத் தொட வேண்டுமென்ற ஆசை எல்லாருக்குமே இருக்கின்றது. ஆனால் அப்பாதையில் உருவாகும் சவால்களும் தடைகளும் பலரை அந்த ஆசையிலிருந்து அகற்றி விடுகின்றன. உண்மையில், உச்சியை எட்டுவதற்கு, இடையில் பல சிறிய படிகளைக் கடந்துதான் ஆக வேண்டும். எனவே ஆமைவேக வளர்ச்சி கண்டு சோர்ந்து விடாமல் இலக்கில் உறுதியாக நிற்க வேண்டும். பாதை எவ்வளவுக்குக் கடினமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதன் வெகுமதியும் இருக்கும். எனவே இன்றே தொடங்குவோம் பயணத்தை ஒரு சிறிய காலடியை எடுத்து வைத்து. ஒரு தொடக்கப்புள்ளி வைத்து விட்டால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை முயற்சியை சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேய்பிறையில் தோற்றுப் போகும் நிலா பின்வாங்கினால் வளர்பிறை சாத்தியமாகுமா? சிந்திப்போம். நிலவில் கால்பதித்த முதல் மனிதர் ஆம்ஸ்ட்ராங்க் போல் வரலாறு படைக்கும்வரை முயற்சி செய்து கொண்டே இருப்போம். ஒரு சிறிய காலடி மகத்தான சக்தியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.