2012-08-27 16:23:58

தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சிறுமி விடுவிக்கப்பட இந்திய கிறிஸ்தவ தலைவர் அழைப்பு


ஆக.27,2012. எழுதப்படிக்கத் தெரியாத பாகிஸ்தானிய சிறுமி ஒருவர், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானைக் கற்றுக்கொள்ள உதவும் குழந்தைகளுக்கான மதபோதக நூலின் சில பக்கங்களை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan George.
மனநிலைப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைச் சிறுமி Rimsha Masih, உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், மற்றும் அச்சிறுமியின் குடும்பத்திற்கு இஸ்லாம் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் உலகச் சமூகத்தை நோக்கியும் இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் நோக்கியும் அழைப்பு விடுத்துள்ளார் Sajan.
பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டம் எந்தஅளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து உலகின் கவனத்தைத் திருப்பRimsha Masihன் அண்மை கைது ஒரு வாய்ப்பாகஇருக்கிறது எனவும் எடுத்துரைத்தார் அவர்.
எதிரிகளைப் பழிவாங்கவும், அண்டை வீட்டாருடன் ஆனசிறு சச்சரவுகளில் வெற்றி காணவும், அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் தேவநிந்தனைச் சட்டம் மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனமேலும் கூறினார் இந்திய கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் Sajan.
தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறுமியின் இவ்வழக்கு இம்மாதம் 31ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது.








All the contents on this site are copyrighted ©.