2012-08-25 15:08:03

கர்தினால் Tauran : கடவுளை மறந்து வாழும் உலகம் மனிதமற்ற உலகம்


ஆக.25,2012. கடவுளை மறந்து வாழும் உலகம் மனிதமற்ற உலகம் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, ரிமினி கூட்டத்தில் கூறினார்.
இத்தாலியின் ரிமினியில் “ஒன்றிப்பும் விடுதலையும்” என்ற பொதுநிலையினர் அமைப்பு நடத்திய கூட்டத்தில், “பன்னாட்டு அரசியலும் சமய சுதந்திரமும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற அமர்வில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய கர்தினால் Tauran இவ்வாறு கூறினார். இவ்வமர்வில் ஐ.நா.பொது அவையின் தலைவர் Nassir Abdulaziz Al-Nasser, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் Giulio Terzi உட்பட பல தலைவர்கள் பங்கு பெற்றனர்.
மனிதர்கள் தன்னிலே சமயப் பண்பு கொண்டவர்கள் என்பதால் அவர்களின் சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாடுகள் கவனம் செலுத்துமாறும் கர்தினால் கேட்டுக் கொண்டார்.
நைஜீரியாவிலும் பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து கவலை தெரிவித்த கர்தினால் Tauran, பாகிஸ்தானில் இந்நாள்களில் தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 வயதுச் சிறுமி Rimsha Masihவின் நிலைமை குறித்தும் கவலை தெரிவித்தார்.
இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, அரசியல், மதம், பொருளாதாரம், கலாச்சாரம் எனப் பல துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்கள் உட்பட எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இக்கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.