2012-08-25 15:31:24

ஆகஸ்ட் 26, பொதுக்காலம் - 21வது ஞாயிறு : சிந்தனை


RealAudioMP3 நேற்று என் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு விதையிட்டது. "நன்மை இவ்வுலகில் இன்னும் நடமாடுகிறது" என்ற கருத்துடன் தொகுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் அந்த மின்னஞ்சலில் வந்திருந்தன. தகிக்கும் கடற்மணலில் செருப்பில்லாத ஓர் ஏழைப் பெண்ணுக்குத் தான் அணிந்திருக்கும் காலணிகளைக் கழற்றித் தரும் ஒரு மனிதர்.... கால்களை இழந்த்தால் ஒரு பலகையில் அமர்ந்தபடியே நகர்ந்து செல்லும் வயதான ஓருவர், கொட்டும் மழையில் சாலையைக் கடக்க தன் குடையை விரித்து அவரை அழைத்துச்செல்லும் இளம்பெண்... இப்படி பல படங்கள்...
இத்தொகுப்பில் இருந்த அனைத்துப் படங்களில் இரண்டு என் கவனத்தை அதிகம் ஈர்த்தன. முதுகுத் தண்டுவடம் வளைந்து, கூனல் விழுந்திருக்கும் 97 வயதான ஒரு பெண்மணி, உடல் முழுவதும் செயல் இழந்து படுத்திருக்கும் தன் 60 வயது மகனுக்கு உணவு ஊட்டுகிறார். இவர் இதை கடந்த 19 ஆண்டுகளாகச் செய்கிறார் என்ற குறிப்பும் உள்ளது.
அடுத்த படம் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டது... இறந்து கிடக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்குக் கண்ணீருடன் முத்தமிட்டு விடை பகரும் ஓர் இளம் தாய்... அக்குழந்தையின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்தியபடி நிற்கிறார்கள். அக்குழந்தைக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்ற கேள்வியும் விளக்கமும் படத்திற்குக்கீழ் கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழந்தையின் சிறுநீரகங்கள், ஈரல் இவற்றால் வேறு இரு குழந்தைகள் அடுத்த அறையில் உயிருடன் வாழ்கிறார்கள்...
மனதைத் தொடும் இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அடிப்படையாக ஓர் அம்சம் உள்ளது... இத்தருணங்கள் அனைத்திலும் சிறிதான அல்லது பெரிதான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. மழைக்குக் குடைபிடிப்பதும், காலணிகளைத் தருவதும் சிறிய செயல்களாக இருக்கலாம்... இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வருவது பெரும் செயலாக இருக்கலாம்... மனித வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம் முடிவெடுப்பது. இந்த அடிப்படை அனுபவத்தை ஆழமாகச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வில், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார் சீமோன் பேதுரு.

யோசுவாவும், சீமான் பேதுருவும் கூறிய வார்த்தைகளில் உள்ள ஒரு பொதுவான அம்சம் என் கவனத்தை ஈர்த்தது. இருவருமே தங்கள் முடிவுகளை ஒருமையில் எடுப்பதாகக் கூறவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24: 15) என்று உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை அவரது குடும்பத்தினர் என்றுமட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.
தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும் நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்.

ஓர் அருள் பணியாளர் என்ற முறையில் சில வேளைகளில் ஒரு குடும்பம் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவுகளின்போது என் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அந்த முடிவுகளுக்காக செபிப்பது மட்டுமல்லாமல், அந்த முடிவுகள் எடுக்கும் நேரத்திலும் அவர்கள் மத்தியில் என்னை அழைத்துள்ளனர். அந்த நேரங்களில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைப் புரிந்துகொள்ள முடியும். பெற்றோர் முடிவுகள் எடுத்தபின், "சரி, உங்கள் மகன் இதற்கு என்ன சொல்கிறார்?" என்று கேட்டால், "அவனையே கேளுங்க, சாமி. எங்களுக்கு ஒன்னும் தெரியாது" என்ற பாணியில் அவர்கள் பதில்கள் அமைந்திருப்பதைப் பலமுறை நான் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் மீது தங்கள் எண்ணங்களை, முடிவுகளைத் திணிக்கக் கூடாது என்ற கொள்கை, பிள்ளைகளுக்காக முடிவுகள் எடுப்பதற்கு உள்ள பயம், ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வை நிர்ணயித்துக் கொள்ளட்டும் என்ற பட்டும் படாமலும் இருக்கும் நிலை... என்ற பல உணர்வுகளை அந்தப் பதிலில் என்னால் உணர முடிகிறது.
'தாமரை இலை மேல் நீர்' போன்ற உறவுகள் மேற்கத்திய நாடுகளில் உள்ள குடும்பங்களில் வளர்ந்துள்ளதைத் தெளிவாகப் பார்க்கலாம். அத்தகைய ஒரு போக்கு தற்போது ஆசிய நாடுகளிலும் பரவிவருவதை நாம் காணலாம். இந்தப் போக்கு தவறான முடிவுகள் எடுக்க வழிவகுக்கிறது. குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அனைவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும் சூழல் நம்மிடையே வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும் இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. சிறு, சிறு முடிவுகள் அந்நேரங்களில் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?
97 வயது நிறைந்த தாய் உடல் முழுவதும் செயல் இழந்து கிடக்கும் தன் மகனை ஒரு காப்பகத்தில் சேர்த்திருக்க முடியும், ஆனால், அவரைத் தானே கவனித்துக்கொள்வதாக அந்தத் தாய் முடிவெடுத்தது எந்த அடிப்படையில்?...
இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களை மற்றக் குழந்தைகளுக்குத் தானம் செய்யத் துணிந்த பெற்றோர்கள் எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தனர்?...
முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 6: 68-69
ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்
"வேறு யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்தப் புதுவாழ்வு... உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

Forbes என்ற அமெரிக்க இதழில் ஆகஸ்ட் 23, இவ்வியாழனன்று உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் ஒன்று வெளியானது. அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மனிதாபிமானச் செயல்கள், ஊடகம் என்ற பல துறைகளில் புகழ்பெற்றவர்களான 100 பெண்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. Subhasini Mistry என்ற வங்காளப் பெண்ணை இந்த பட்டியலில் நான் தேடினேன். கிடைக்கவில்லை. இப்பெண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
ஒரு மருத்துவமனையின் கதை என்ற தலைப்பில் இவரைப் பற்றிய விவரங்களை என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இக்கதையை முழுமையாகக் கூற இங்கே நேரம் இல்லை. சுபாசினிக்குத் தற்போது 60க்கும் மேல் வயதாகிறது. இவரது கணவர் சாலைகளில் காய்கறி விற்கும் வேலை செய்தார். சுபாசினிக்கு 23 வயதாக இருந்தபோது, இவர் கணவர் ஒருநாள் வயிற்றுவலியால் துடித்தபோது, சுபாசினி அவரை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார். அது ஓர் அரசு மருத்துவமனை என்றாலும், அங்கிருந்தவர்கள் இவரிடம் பணம் எதிர்பார்த்தனர். சுபாசினியிடம் பணம் இல்லாததால், அவரது கணவரை யாரும் கவனிக்கவில்லை. அவர் வலியில் துடிதுடித்து இறந்தார். அந்த நேரத்தில் சுபாசினியின் மனதில் ஒரு முடிவு உருவானது. நான் எப்படியும் ஒரு மருத்துவமனையை எழுப்பி அங்கு ஏழைகளுக்கு உடனடியான, இலவசமான உதவிகள் செய்வேன். என்ற முடிவு அது. இதை ஒரு சபதம் என்றே சொல்லவேண்டும். அவரது சபதத்தைக் கேட்ட மற்றவர்கள் அவரை எள்ளி நகையாடினர். சுபாசினியின் சபதம் எட்டமுடியாத ஒரு கனவு என்றே திரும்பத் திரும்பச் சொல்லிவந்தனர். தன் கணவரின் மரணத்தைப் போல மற்ற ஏழைகள் இறக்கக்கூடாது என்று சுபாசினி எடுத்த முடிவுக்குப் பின் இருபது ஆண்டுகள் அயராது உழைத்தார். தன் மகன் Ajoy Mistryஐ மருத்துவம் படிக்கவைத்தார். இவ்விருவரின் தளராத முயற்சியால், Humanity Hospital - மனிதாபிமான மருத்துவமனை - இன்று வங்காளத்தின் Hanspukurல் உயர்ந்து நிற்கிறது.
கட்டிடம் என்ற அளவிலோ, மருத்துவ வசதிகள் என்ற அளவிலோ இம்மருத்துவமனை பிரம்மாண்டமாக உயரவில்லை, ஆனால் வறியோரின் மனதில் Humanity Hospital ஒரு கோவிலாக உயர்ந்து நிற்கிறது. சுபாசினி என்ற ஓர் ஏழைப் பெண் தான் அனுபவித்த மிகக் கொடிய துன்பத்தின் நடுவில் எடுத்த ஒரு முடிவு இன்று பல நூறு ஏழைகளைக் காப்பாற்றும் ஒரு கோவிலாக நிற்கிறது.
இவரைப் பற்றிய கட்டுரையொன்று The Weekend Leader என்ற இதழில் ஆகஸ்ட் 24 வெளியாகியுள்ளது. தயவுசெய்து நேரம் ஒதுக்கி இதைப் படியுங்கள். இந்தக் கட்டுரையின் ஆசிரியர் Anita Pratap, Subhasini Mistry இடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார்: "எப்படி உங்களால் இவ்வளவு சாதிக்க முடிந்தது?" என்று அவர் கேட்டதற்கு, . சுபாசினி சொன்ன பதில் நமக்கு இன்று பாடமாக அமைகிறது.
"என் வாழ்வின் மிகவும் இருளான நாளன்று கடவுள் எனக்கு ஒளி தந்தார். அன்றிலிருந்து என் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருந்ததாக நான் உணர்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எடுத்த ஒரே ஒரு முடிவுக்காகப் பயன்படுத்தினேன். ஏழை என்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் தனது அன்பு உறவின் மரணத்தைக் காணக் கூடாது என்பதே அம்முடிவு." என்று Subhasini அக்கட்டுரையின் ஆசிரியருக்குச் சொன்னார்.How did she achieve all this? She says: “Inner Strength.” She adds with rustic wisdom: “God in his infinite grace gave me a vision at the darkest moment in my life. From then on, my life had a purpose. I used whatever strength God gave me to make sure other poor people did not lose their loved ones for lack of medical attention.”
97 வயதான போதிலும் தன் மகனைத் தொடர்ந்து காப்பாற்றும் அந்த முதுமைத் தாய், இறக்கும் நிலையில் உள்ள தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்த இளம் பெற்றோர், தன் கணவனின் இறப்பால் கசந்துபோகாமல், ஏழைகளுக்கென மருத்துவமனையை எழுப்பிய சுபாசினி, போன்ற உறுதியான உள்ளங்களின் வாழ்வால் நாம் தூண்டப்பெற இறைவனை இறைஞ்சுவோம்.
வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். முக்கியமான முடிவுகளில் குடும்பங்கள் இணைந்துவந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.