2012-08-25 15:13:24

அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு அரசுக்கும் ஐ.நாவுக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்


ஆக.25,2012. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்க்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகளில் பல சிறார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என தொமினிக்கன் சபை அருள்தந்தை James Channan குறை கூறினார்.
பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதற்காக லாகூரில் இயங்கி வரும் அமைதி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Channan, ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் வாழும் அனைத்துக் குடிமக்களின் மனித மாண்பும் மனித உரிமைகளும் மதிக்கப்படுவதற்கு உறுதியளிக்கும் வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் வலியுறுத்துவதாகவும் இவர் கூறினார்.
மேலும், சமய சுதந்திரத்துக்கான ஐ.நா.சிறப்புப் பார்வையாளர் சார்பில் பாகிஸ்தானில் ஒரு சிறப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும், பாகிஸ்தானில் இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் என்று இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் விரும்புவதாகவும் அருள்தந்தை Channan கூறினார்.
கிறிஸ்தவர்களுக்குப் பாகிஸ்தானில் வாழ்வது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டு வருகின்றதெனவும், பல கிறிஸ்தவச் சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாயமாக இசுலாமில் இணைக்கப்படுகின்றனர் எனவும், “பாகிஸ்தானின் 'Maria Goretti” என அழைக்கப்படும் Amariah Masih விவகாரத்தில் நடந்துள்ளது போல சிறுமிகள் கொலையும் செய்யப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தேவநிந்தனை சட்டத்தின்கீழும் சிறார் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்றுரைத்த அருள்தந்தை Channan, இவ்வாறு சிறார்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தால், சகிப்பற்றதன்மையினால் செய்யப்படும் உரிமை மீறல்களும், மனிதமற்ற செயல்களும் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று கவலை தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.