2012-08-23 16:04:54

ஸ்காட்லாந்து அரசியல் தலைவர்கள் குடும்ப உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும் - கர்தினால் Keith O'Brien


ஆக.23,2012. ஸ்காட்லாந்து அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் மணவாழ்வையும், குடும்ப உறவுகளையும் குலைப்பதற்குப் பதில், கட்டியெழுப்பவேண்டும் என்று கர்தினால் Keith O'Brien, கூறினார்.
ஆகஸ்ட் 26, வருகிற ஞாயிறன்று 'நாட்டின் திருமண ஞாயிறு' கடைபிடிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் O'Brien அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து ஆயர்கள் பேரவை புதிதாக உருவாக்கியுள்ள திருமணம், குடும்பம் பணிகள் அவை என்ற பணிக்குழுவைப் பற்றிய சுற்றுமடல், வருகிற ஞாயிறன்று ஸ்காட்லாந்தில் உள்ள 500 கத்தோலிக்கப் பங்குகளில் வாசிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் திருஅவையில் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் இயற்கையின் வழிவந்த திருமண உறவையும், குடும்பங்களையும் போற்றி வளர்க்க ஒவ்வொரு கத்தோலிக்கரும் அழைக்கப்பட்டுள்ளார் என்று ஆயர்களின் சுற்றுமடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் ஒரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவு கூறாதபோது அரசியல் தலைவர்கள் ஒரே பாலினத் திருமணத்தை சட்டயமயமாக்க முயல்வது பெரும் அநீதி என்று கர்தினால் O'Brien அண்மைய நாட்களில் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.