2012-08-23 16:01:52

திருத்தந்தையின் லெபனான் நாட்டுப் பயணம் வசந்தத்தின் வருகையைப்போல் இருக்கும்


ஆக.23,2012. லெபனான் நாட்டுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, லெபனானில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம் என்று லெபனான் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி முடிய திருத்தந்தை லெபனான் நாட்டில் மேற்கொள்ளும் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஆயர் Camille Zaidan, இப்பயணம் பற்றிய விவரங்களை இப்புதனன்று செய்தியாளர்களிடம் விளக்கியபோது இவ்வாறு கூறினார்.
லெபனான் நாட்டு ஆயர்கள் மட்டுமின்றி, நாட்டுத் தலைவரும் திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Zaidan, நாட்டின் உயர் அதிகாரிகள் வத்திக்கானுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர் என்றும் எடுத்துரைத்தார்.
லெபனான் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் திருத்தந்தையின் வருகை வசந்தத்தின் வருகையைப்போல் இருக்கும் என்ற தன் நம்பிக்கையை ஆயர் Zaidan நிருபர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.
திருத்தந்தையின் லெபனான் பயணம் குறித்து ஊடகங்களில் அண்மையில் வெளியாகி வரும் வதந்திகளைப் பொருட்படுத்தாமல், லெபனானில் அவர் வருகை குறித்து எதிர்பாராத அளவு ஆர்வம் உருவாகியுள்ளதென பயண ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் அருள்தந்தை Abdo Abu Kassem செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, திருத்தந்தை லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சாலைவழி மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படவிருக்கும் சிறப்பு வாகனம் Beirut சென்றடைந்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.