2012-08-23 15:58:05

திருத்தந்தை : திருஅவையில் பொதுநிலையினர் உடன்பொறுப்பாளர்கள்


ஆக.23,2012. திருஅவையின் வாழ்விலும் செயலிலும் பொதுநிலை விசுவாசிகள் அருட்பணியாளர்களோடு ஒத்துழைப்பாளர்களாக நோக்கப்படாமல், உண்மையில் இவர்கள் உடன்பொறுப்பாளர்களாகக் கருதப்பட வேண்டுமென்று திருத்தந்தை கூறியுள்ளார்.
Romania நாட்டு Iasiல் இப்புதனன்று தொடங்கியுள்ள அனைத்துலக கத்தோலிக்க கழகத்தின் ஆறாவது பொதுப் பேரவைக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, திருஅவையில் பொதுநிலை விசுவாசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
விசுவாச ஆண்டும், நற்செய்தியைப் புதிய முறைகளில் அறிவிப்பது குறித்த ஆயர்கள் மாமன்றமும் தொடங்கவிருக்கும் இவ்வேளையில், திருஅவையிலும் சமூகத்திலும் பொதுநிலையினரின் பங்கு குறித்த இப்பேரவை பொதுநிலையினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கிறிஸ்தவர்களின் பண்புகளை நினைவில் கொண்டு திருஅவையில் ஓர் ஆழமான ஒன்றிப்புடன் வாழவும் அவர் பொதுநிலையினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேய்ப்பர்களுக்கும் பொதுநிலையினருக்குமிடையே உள்ள உள்ளங்கலந்த உரையாடலின் மூலம் திருஅவைக்குப் பல நன்மைகள் உண்டாகும், இதனால் பொதுநிலையினரிடையே பொறுப்புணர்வு வலுப்பெற்று ஆர்வம் வளர்ந்து, மேய்ப்பர்களின் பணியோடு அவர்களின் ஆற்றல் அதிக எளிதாக இணைந்து செயல்பட ஏதுவாகும், மேய்ப்பர்கள் பொதுநிலையினரின் அனுபவத்தால் பயன்பெற்று ஆன்மீக, உலகக் காரியங்களில் இன்னும் தெளிவாகவும் ஏற்றமுறையிலும் தீர்வு எடுக்க முடியும் என்ற ‘லூமென் ஜென்சியும்’ மறைக்கொள்கைத்திரட்டின் கூற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த ஆறாவது அனைத்துலக கத்தோலிக்க கழகத்தின் பொதுப் பேரவை வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இதில் 4 கண்டங்களின் 35 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். “கத்தோலிக்க கழகத்தின் பொதுநிலையினர்: திருஅவையிலும் சமூகத்திலும் உடன்பொறுப்பாளர்கள்” என்ற தலைப்பில் இப்பேரவை நடைபெற்று வருகிறது. கத்தோலிக்கத் திருஅவையில் பொதுநிலையினரின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.