2012-08-22 16:06:37

மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் வீரரின் கடவுள் நம்பிக்கை


ஆக.22,2012. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தான் வென்றாலும் தோற்றாலும் இறைவன் தன்னை எப்போதும் கண்காணித்து வருகிறார் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் Gemma Rose Foo, கூறினார்.
ஆகஸ்ட் 29, வருகிற புதனன்று இலண்டன் நகரில் ஆரம்பமாகும் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குதிரைப் பந்தயப் பிரிவில் கலந்து கொள்ள பயிற்சிகளை மேற்கொண்டு வரும் Gemma, தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு சவால்களில் இறைவனின் தொடர்ந்த கண்காணிப்பை உணர்ந்ததாக CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
புனித தெரேசா கான்வென்ட் பள்ளியில் பயிலும் 16 வயது இளம்பெண் Gemma, cerebral palsy எனப்படும் மூளை மற்றும் நரம்பு தொடர்பான குறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்.
சரிவர நடக்க முடியாத Gemma, தன் குறையைப் பெரிதுபடுத்தாமல், குதிரை மீது பயணிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர். இப்பந்தயங்களில் பங்கேற்பதன் மூலம் தனது வலிமையைவிட இறைவனின் அருளையே பெரிதும் நம்பும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் குதிரைப் பந்தயத்தில் ஆசியாவிலிருந்து பங்கேற்கும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் Gemma Rose Foo.








All the contents on this site are copyrighted ©.