2012-08-21 16:09:51

யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ்ப்பாணம் ஆயர் புகார்


ஆக.21,2012. யாழ்ப்பாண மாவட்டத்தில் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், படைக்குறைப்பில் திருப்தியில்லையென யாழ்ப்பாணம் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
இத்திங்களன்று யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி வில்லியம்ஸ் கைன் ஸ்ரைனிடம் இவ்வாறு தெரிவித்தார் ஆயர் தாமஸ்.
இச்சந்திப்பு குறித்து நிருபர்களிடம் பேசிய ஆயர் தாமஸ், மீள்க்குடியமர்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மீள்க்குடியமர்வில் மக்களுக்கு தேவையான வீடு, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாகச் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு இன்னமும் முன்வைக்கவில்லை எனவும் வடமாநிலத் தேர்தலை அரசு இன்னமும் நடத்தவில்லை எனவும், ஒருவேளை இப்பகுதிக்கானத் தேர்தலை அரசு நடத்தினால் மக்கள் தம்முடன் இல்லையென்பதை உலகம் அறிந்து விடும் என அச்சம் கொள்கின்றது எனவும் அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளபோதும் அரசு அவற்றை அமல்படுத்த வேண்டும். அவற்றை அமல்படுத்தினால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் ஆயர் தாமஸ்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த அமெரிக்க தூதரகக் குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.