2012-08-20 15:07:26

பாகிஸ்தானில் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் 11 வயது சிறுமிக்குச் சிறைதண்டனை


ஆக.20,2012. பாகிஸ்தானில் நிலவி வரும் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் Rimsha Masih என்ற 11 வயது நிரம்பிய சிறுமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை Rimsha Masih எரித்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைக் கொல்வதற்குத் திரண்ட மக்களிடமிருந்து காவல்துறை அச்சிறுமியை அப்புறப்படுத்தி, கைது செய்துள்ளது.
Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள Rimshaவின் கைது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தால் வன்முறைகள் பெருகக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்கள் வெளியேறியுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத் நகரின் சேரிப்பகுதியில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் அப்பகுதியில் வன்முறைகள் ஏற்பாடாமல் இருக்க பாகிஸ்தான் நல்லிணக்கத் துறை அமைச்சர் Paul Bhatti வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ், இதுவரை குறைந்தது 1000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 60க்கும் மேற்பட்டோர் சட்டங்களுக்குப் புறம்பாக மக்களின் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
வயது குறைந்த ஒருவரை, தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்திருப்பது இதுவே முதல் முறை. மனநலம் சரியில்லாத இவரைக் கைது செய்திருப்பதைக் கண்டு இஸ்லாமியரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.