2012-08-20 15:04:46

சிரியாவில் நிலவிவரும் பதட்ட நிலையின் எதிரொலி லெபனான் நாட்டிலும் உணரப்படுகிறது - Maronite கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர்


ஆக.20,2012. சிரியாவில் தொடர்ந்து நிலவிவரும் பதட்ட நிலையின் எதிரொலி லெபனான் நாட்டிலும் உணரப்படுகிறது என்று Maronite கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai கூறினார்.
சிரியாவின் அரசுத் தலைவர் Assadக்கு ஆதரவாகவும், அவரை எதிர்க்கும் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவாகவும் லெபனான் நாட்டில் இரு வேறுபட்ட ஆதரவு அலைகள் தற்போது உருவாகிவருவதைச் சுட்டிக்காட்டி பேசிய முதுபெரும் தலைவர் Boutros Rai, இந்த அலைகளால் கிறிஸ்தவர்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
லெபனான் நாட்டில் பொதுவாக கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியருக்கு பெரும் மதிப்பு உள்ளது என்று கூறிய முதுபெரும் தலைவர், இந்நாட்டின் கலாச்சாரத்திற்கும், அறிவு சார்ந்த வளர்ச்சிக்கும் கிறிஸ்தவர்கள் ஆற்றியுள்ள பணிகளை இஸ்லாமியர் மறப்பதில்லை என்றும் வலியுறுத்திக் கூறினார்.
லெபனானில் தற்போது நிலவிவரும் இந்த பதட்டம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வருகையால் தணியும் என்ற தன் நம்பிக்கையையும் முதுபெரும் தலைவர் Boutros Rai வெளியிட்டார்.
வருகிற செப்டம்பர் மாதம் 14 முதல் 16 முடிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனான் நாட்டுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார்.








All the contents on this site are copyrighted ©.