2012-08-18 15:38:40

மாலி நாட்டில் சிறார்ப் படைவீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : யுனிசெஃப்


ஆக.18,2012. மாலி நாட்டின் வடபகுதியில் போரிடும் ஆயுதக் கும்பல்கள் சிறார்களைப் பெருமளவில் இராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் குற்றம் சாட்டியுள்ளது.
12 க்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட குறைந்தது 175 சிறார் ஆயுதக் கும்பல்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கடந்த மாதம் கூறிய யுனிசெஃப் நிறுவனம், இவ்வெண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துவருவதாக கூறுகிறது.
மாலியில் போரிடும் குழுக்கள் சிறாரைப் படைப்பிரிவில் சேர்ப்பதைத் தவிர்க்குமாறும் யுனிசெப் நிறுவனம் கேட்டுள்ளது.
மாலியில் கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற தன்மையினால் 2,50,000க்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஏறத்தாழ 1,74,000 பேர் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆயுதக் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.
18 வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பது அனைத்துலகச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பது போர்க் குற்றமாகும் மற்றும் மனித சமுதாயத்துக்கு எதிரானக் குற்றமுமாகும்.







All the contents on this site are copyrighted ©.