எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவரின் மறைவுக்குத் திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்
ஆக.18,2012. எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும் தலைவர் Abuna
Paulosன் மறைவையொட்டித் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் அருட்பணியாளர்கள், துறவிகள்
மற்றும் விசுவாசிகளுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அத்தலத்திருஅவையை
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகத் தலைமையேற்று வழிநடத்திவந்த முதுபெரும் தலைவர் Paulos, கிறிஸ்தவ
ஒன்றிப்புக்கென எடுத்த முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். முதுபெரும் தலைவர் Paulos,
வத்திக்கானுக்கு மேற்கொண்ட பயணங்களை, சிறப்பாக, 2009ம் ஆண்டில் ஆப்ரிக்க சிறப்பு ஆயர்
மாமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை மகிழ்வோடு நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, உரையாடல் மற்றும்
ஒத்துழைப்பு வழியாக, எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும், கத்தோலிக்கத்
திருஅவைக்கும் இடையே ஒன்றிப்பு ஏற்படுவதற்கு அவர் தன்னை ஈடுபடுத்தியிருந்ததற்கு நன்றி
தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவின் ஏறக்குறைய 8 கோடியே 30 இலட்சம்
மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவையைச் சார்ந்தவர்கள். எத்தியோப்பிய-எரிட்ரியா
எல்லைச் சண்டையின் போது ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக இரண்டாயிரமாம் ஆண்டில் ஐ.நா.வின்
நெல்சன் மண்டேலா விருதைப் பெற்றிருப்பவர் முதுபெரும் தலைவர் Paulos. இவர் நீண்டகால நோய்க்குப்
பின்னர் ஆகஸ்ட் 17, இவ்வியாழனன்று இறைபதம் அடைந்தார். சுமார் 56 கோடிக் கிறிஸ்தவர்களை
உறுப்பினர்களாகக் கொண்டுள்ள 349 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பான உலக கிறிஸ்தவ சபைகள்
மன்றத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.