2012-08-18 15:22:00

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து பேராயர் Michalikம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்திற்குக் கர்தினால் Erdő பாராட்டு


ஆக.18,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalikம் கையெழுத்திட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்திற்குத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Péter Erdő.
இவ்வெள்ளியன்று இவ்விரு தலைவர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ள Esztergom-Budapest பேராயர் கர்தினால் Erdő, ஐரோப்பா முழுவதும் உண்மையான மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களைப் பரப்புவதற்கு இவ்வொப்பந்தம் உதவியாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பா முழுவதும் ஆன்மீக மற்றும் சமூக வாழ்வில் பெரும் குழப்பம் காணப்படும் இக்காலத்தில், இவ்வொப்பந்தம் நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றது என்றும் அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Erdő.
இவ்வெள்ளியன்று போலந்தின் Warsawவில் கையெழுத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்தில், இரஷ்யா, போலந்து ஆகிய இருநாடுகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பகைமை உணர்வுகளால் விளைந்துள்ள காயங்களைக் குணமாக்கவும், ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒப்புரவில் வளரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.