2012-08-18 15:40:31

ஆகஸ்ட் 19, பொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா?" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” – Giles Duley)
இந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர் Giles Duley என்ற 40 வயது மனிதர். இவர் கடந்த ஆண்டு முதல் இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஆகஸ்ட் 19, இந்த ஞாயிறை இந்தியத் திருஅவை நீதியின் ஞாயிறெனக் கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. நீதியின் ஞாயிறன்று Giles Duley பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் பேசியதைக் கேட்டபோது, நீதி ஞாயிறுக்குரிய மறையுரையைக் கேட்டதுபோல உணர்ந்தேன்.

Giles Duley ஒரு புகைப்படக் கலைஞர். பத்தாண்டுகளுக்கும் மேலாக 'பேஷன்' (fashion) உலகில் புகைப்படங்கள் எடுத்துவந்தவர். உடைகள், காலணிகள், நகைகள், என்று மிக விலைஉயர்ந்த பொருட்களை விளம்பரம் செய்யும் அழகான, ஆடம்பரமான மனிதர்களுடன் வாழ்ந்தவர். அந்தப் பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த செயற்கையான, பளபளப்பான உலகம் இவருக்குச் சலிப்பைத் தரத் துவங்கியது. அந்த உலகிற்கே உரிய ஆணவம், கர்வம் கொண்டவர்களுடன் பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு கசப்பாக மாறிவந்தது.
ஒரு நாள் இரவு இப்படி ஒரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த காமிராவை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ‘ஸ்ப்ரிங்’ கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, படுக்கையில் விழுந்து, துள்ளி, சன்னல் வழியே வெளியே விழுந்தது. இவருக்கு இதுவரை வாழ்க்கை தந்த காமிரா இவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே இவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அந்த நேரத்தில் தன் வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று Giles கூறுகிறார்.

அந்த இரவுவரை செயற்கையான விளம்பர உலகை தன் காமிராக் கண்களால் கண்டுவந்த Giles, அடுத்தநாள் முதல் இயற்கையான உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளைப் புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கண்களில் விழும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களைப் படம் எடுக்க ஆரம்பித்தார்.
இந்த் முயற்சி அவரை ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, இவர் வாழ்வில் மீண்டும் ஒரு மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்த அந்த நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் Giles. அப்போது ஒரு நாள், நிலத்தடியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியை இவர் மிதித்தால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார். இவர் Ted இணையதளம் வழியாகப் பேசியதில் ஒரு பகுதியைத்தான் நான் நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரை என்று சொன்னேன். அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இதோ:
புகைப்படக் கலைஞனாய் இருந்தவரை மற்றவர்களையே நான் படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட என் உடல் ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது.
என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை என் கதையில் சொல்கிறேன்.
Giles கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?

இந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை நான் பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை எனக்குப் புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவைகளை இப்போது நான் அடைந்துள்ளேன்.

இவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் Giles, மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராட்டங்களை மேற்கொள்ளும் அவருக்கு சிலநாட்களில் காலை விடியும்போது, கால்களை எடுத்து மாட்டிக்கொண்டு படுக்கையைவிட்டு தான் இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இதைத்தான் இந்தச் சிந்தனையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்டேன். 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.

இத்தனை போராட்டங்கள் மத்தியிலும் Giles தான் செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: "நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவைகளைப் பார்த்து அப்படியே உறைந்துபோகாமல், அந்த அவலங்களைப்பற்றி பேசுவோம், கருத்துக்களைப் பரிமாறுவோம், மாற்றங்கள் பிறக்க வழிகள் தெளிவாகும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்." என்பதே அவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம். இந்தப் பாடத்தையே நீதி ஞாயிறின் மையப் பொருளாக நான் எண்ணிப்பார்க்க விழைகிறேன்.

நீதி ஞாயிறு என்றதும், கொடி பிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இந்த வெளிப்படையான முயற்சிகளுடன் நமது நீதித் தேடல் முடிந்துவிட்டால், பயனில்லை.
இவ்வாண்டு நீதி ஞாயிறுக்கென இந்தியத் திருஅவை விடுத்துள்ள முக்கிய கருத்து, அழைப்பு என்ன? Called to Witness to Justice through our Word and Work” சொல்லாலும், செயலாலும் நீதிக்குச் சாட்சியாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது செயல்களில் நீதி வெளிப்படவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப் பற்றி, வறியோரைப் பற்றி வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே!

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், தற்போது நாம் காணும் சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்து ஆரம்பமாக வேண்டுமா? வெளியிலிருந்து ஆரம்பமாக வேண்டுமா? என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும், அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும், அவர் மாறவேண்டும், இவர் மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள் அதிகம். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.

வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்களே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், குண்டுகள் வீசுவதையும், கட்சிகள் சேர்ப்பதையும் நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு மேலோட்டமாக ஒரு கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு இவ்விதம் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் இந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு நற்செய்தியில் சொல்கிறார்.

அப்பங்களையும், மீன்களையும் இயேசு பலுகச்செய்தபோது, வயிறார உண்டவர்கள் இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன்? அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம் அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அந்தச் சமதர்ம சமுதாயத்தை இயேசு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில் அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். எளிதான, சுகமான சமுதாய மாற்றத்தை உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். “அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் கூட்டி வரவில்லை” என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன் மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார்.
அவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார். சதை, இரத்தம் என்ற இந்த வார்த்தைகளே அந்த மக்களை நிலைகுலையச் செய்கிறது. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இவரைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறாரே... என்று அவர்கள் தடுமாறுகின்றனர். இருந்தாலும் இயேசு அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்: "என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்."

வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும், ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக, மீதமும் இருக்கும்." என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் சொல்ல முயல்கிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இயேசு இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன?








All the contents on this site are copyrighted ©.