2012-08-17 15:31:09

போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்குத் திருத்தந்தையின் தந்திச் செய்தி


ஆக.17,2012. இன்னும் பிறக்காதக் குழந்தைகளைத் தங்கள் செபங்கள் மூலம் பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
போலந்து நாட்டில் Jasna Gora எனும் திருத்தலத்தில் உள்ள அன்னை மரியாவுக்கு கடந்த 300 ஆண்டுகளாக அந்நாட்டு மக்கள் திருப்பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். 1987ம் ஆண்டு முதல் இத்திருப்பயணத்தை இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கென மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இந்த முயற்சியின் 25ம் ஆண்டைச் சிறப்பிக்க இவ்வாண்டு Krakowவிலிருந்து Jasna Goraவுக்கு விசுவாசிகள் மேற்கொண்டுள்ள திருப்பயணத்தை வாழ்த்தி திருத்தந்தை தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
இன்னும் பிறக்காத குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்காக செபமாலை, திருநற்கருணை வழிபாடு போன்ற பக்தி முயற்சிகளை மேற்கொண்டு வரும் பக்தர்களின் தாராள, தளராத மனதை திருத்தந்தை தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.
கருவில் உயிர்களைச் சுமந்திருக்கும் அன்னையர் இந்த முயற்சிகளால் உறுதியடைந்து, கருக்கலைப்பு என்ற தவறான முடிவை எடுக்காமல் இருப்பர் என்று தான் நம்புவதாகவும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.