2012-08-17 15:36:32

இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தம்


ஆக.17,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவரும், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தத்தில் இவ்வெள்ளியன்று கையெழுத்திட்டுள்ளனர்.
இரஷ்யாவுக்கும், போலந்துக்கும் இடையே வரலாற்றில் நிகழ்ந்த பல கசப்பான பகைமை நிகழ்வுகளிலிருந்து இரு நாடுகளும் வெளியேறுவதன் ஆரம்ப முயற்சியாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் முதலாம் Kirill, இவ்வியாழனன்று போலந்து நாட்டுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் உச்சகட்டமாக, முதலாம் Kirill அவர்களும், போலந்து ஆயர்கள் பேரவைத் தலைவரான பேராயர் Jozef Michalik அவர்களும் Warsawவில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரஷ்யா, போலந்து ஆகிய இருநாடுகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பகைமை உணர்வுகளால் விளைந்துள்ள காயங்களைக் குணமாக்கவும், ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒப்புரவில் வளரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது இவ்விரு நாடுகளும் எதிர்கொண்ட துயரங்களையும், முக்கியமாக எதுவும் அறியாத அப்பாவி மக்கள் சந்தித்த துயரங்களையும் இந்த ஒப்பந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், தொடர்ந்து இருநாடுகளும் திறந்த மனதுடன் உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பும் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் முதலாம் Kiril மேற்கொண்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் பயணத்தில் அவர் போலந்து நாட்டு அரசுத்தலைவர் Bronislaw Komorowski அவர்களையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.