2012-08-17 15:42:26

இந்தியாவில் புதிய மருந்துகளுக்கான ஆய்வுகள் பற்றிய தெளிவான வரைமுறைகள் இல்லை


ஆக.17,2012. புதிய மருந்துகளுக்கான ஆய்வுகள் இந்தியாவில் நடத்தப்படும்போது, ஆய்வுகளில் பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள், உயிரிழப்புகளுக்கான இழப்பீடு குறித்து இந்திய அரசு கொண்டுவரும் புதிய சட்டத்தில் தெளிவான வரைமுறைகள் இல்லை என்று நலவாழ்வு ஆர்வலர்கள் கூறினர்.
மனிதர்களின் நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்போது, அவை மனிதர்களுக்கு எவ்வகை பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதற்காக பலகட்ட ஆய்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் புதிய மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வு செய்வதற்கு கடுமையான சட்டதிட்டங்களும், கண்காணிப்புகளும் உள்ளதால், அண்மை ஆண்டுகளில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய ஆய்வுகளை முறையாக கண்காணிப்பதற்கான கடுமையான சட்டதிட்டங்களோ, முறையாக பயிற்சியளிக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்களோ இல்லாமலிருப்பதும் இந்த ஆர்வத்திற்கு மற்றொரு காரணம் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவில் முறைப்படுத்தப்படாத மருத்துவ ஆய்வுகளில் பங்குபெற்றவர்கள் சிலர் மரணமடைந்த சம்பவங்கள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, இந்திய அரசின் மருத்துவ தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருக்கிறது.
மருத்துவ ஆய்வுகளில் பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மற்றும் இந்த ஆய்வுகளால் ஏற்படும் மரணங்களுக்கு உரிய இழப்பீடு அளிப்பது தொடர்பான பிரிவுகள் இப்புதிய விதிமுறைகளில் முறையாக இல்லை என்று நலவாழ்வு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.