2012-08-16 15:06:15

நைஜீரியப் பேராயருக்கு அகில உலக Pax Christi விருது


ஆக.16,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் Abuja பேராயராகப் பணியாற்றும் John Onaiyekan அவர்களுக்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி அகில உலக Pax Christi விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளற்ற உலகை உருவாக்குதல், அமைதி, நீதி, போன்ற உயர்ந்த கொள்கைகளுக்காகப் பணியாற்றி வருவோருக்கு Pax Christi அமைப்பு விருதுகள் வழங்கி வருகிறது. 2012ம் ஆண்டுக்கான இவ்விருதை Abuja பேராயர் Onaiyekan அவர்களுக்கு வழங்க Pax Christi அமைப்பு முடிவு செய்துள்ளது.
வன்முறைகளைச் சந்தித்துவரும் நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் உருவாக்க பேராயர் Onaiyekan மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
உரையாடல் மூலம் மக்களிடையே ஒற்றுமையை கொணர முடியும் என்ற கொள்கைக்கு Abuja பேராயர் Onaiyekan அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று Pax Christi விருதுக்குழுவினர் கூறியுள்ளனர்.
உலக அமைதிக்காக உழைத்த மகாத்மா காந்தி, மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், Dorothy Day ஆகியோரை அகில உலக Pax Christi அமைப்பினர் எடுத்துக்காட்டுக்களாகப் பறைசாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.