2012-08-16 15:30:34

சிகரெட் விற்பனைக்கு ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள புதிய அரசாணைகளுக்கு WHO பாராட்டு


ஆக.16,2012. புகையிலைப் பொருட்களை விற்கும் முறைகளில் ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள அரசாணைகளை எதிர்த்து, புகையிலை நிறுவனங்கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து, அரசின் முடிவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ள ஆஸ்திரேலிய உச்சநீதி மன்றத்தை ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் WHO பாராட்டியுள்ளது.
சிகரெட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி சிகரெட் பெட்டிகளை அமைப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து நிறுவனங்களும் ஒரேவிதமாக, இளம்பச்சை நிறத்தில் பெட்டிகளை அமைத்து, சிகரெட் குடிப்பதால் விளையும் தீமைகளைக் காட்டும் படங்களை அப்பெட்டிகளில் பிரசுரிக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் இவ்வாணை 2012ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. அரசின் இவ்வாணையை நீக்க வேண்டும் என்று புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. இவ்வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம், அரசுக்கு ஆதரவாகத் தன் தீர்ப்பை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசும், உச்ச நீதி மன்றமும் காட்டியுள்ள துணிவைப் பாராட்டிப் பேசிய WHO உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret Chan, இதே துணிவை மற்ற நாடுகளும் பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புகையிலை பயன்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் 60 மக்கள் இறக்கின்றனர் என்று கூறும் WHO அறிக்கை, இந்த மரணங்கள் தடுக்கக்கூடிய ஒன்று என்றும், புகையிலை நிறுவனங்களின் அளவுக்கு மீறிய விளம்பரங்களைத் தடுக்காவிடில் இந்த மரணங்கள் விரைவில் 80 இலட்சமாக மாறும் என்றும் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.