2012-08-16 15:09:03

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும், போலந்து கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்


ஆக.16,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவரும், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தத்தில் இவ்வேள்ளியன்று கையெழுத்திடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரஷ்யாவுக்கும், போலந்துக்கும் இடையே வரலாற்றில் நிகழ்ந்த பல கசப்பான பகைமை நிகழ்வுகளிலிருந்து இரு நாடுகளும் வெளியேறுவதற்கு ஒரு முதல் முயற்சியாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் முதலாம் Kirill போலந்துக்கு இவ்வியாழனன்று பயணம் மேற்கொண்டார்.
இந்த முயற்சியை ஓர் அரசியல் முயற்சியென்று அர்த்தம் கொள்வதற்குப் பதிலாக, கிறிஸ்து காட்டும் மன்னிப்பின் வழியில் செல்வதற்கு இரு திருஅவைகளும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகக் காணவேண்டும் என்று போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Jozef Michalik கூறினார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள கசப்பான வரலாற்றை மறந்துவிட முடியாது என்றாலும், அந்த வரலாற்றின் காயங்களை நற்செய்தி படிப்பினைகளின் ஒளிகொண்டு மன்னிக்கமுடியும் என்பதற்கு இம்முயற்சி ஓர் அடையாளம் என்று போலந்து ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Jozef Kloch கூறினார்.
வியாழன் முதல் ஞாயிறு வரை நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையும் போலந்து கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து பல விடயங்களைக் கலந்தாலோசிக்க உள்ளன.








All the contents on this site are copyrighted ©.