2012-08-15 15:37:38

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஆக. 15, 2012. திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் விடுமுறை நாட்களைச் செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவான இப்புதனன்று காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு, காஸ்தல் கந்தோல்ஃபோ பங்குதள மக்களுக்கு, பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். ஏறத்தாழ மூவாயிரம் பேர் கூடியிருந்த இத்திருப்பலிக்குப்பின், நண்பகல் 12 மணிக்கு வழங்கிய மூவேளை செப உரையில், அன்னை மரியாவின் விண்ணேற்பு குறித்து எடுத்துரைத்தார்.
ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள திருஅவை, அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவைச் சிறப்பிக்கின்றது. கத்தோலிக்கத் திருஅவையில், அன்னை மரியாவின் விண்ணேற்பு குறித்த விசுவாசக் கொள்கைத்திரட்டு 1950ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்னை மரியாவைப் பற்றிய இம்மறையுண்மையின் கொண்டாட்டம் திருஅவையின் துவக்கத்திலிருந்தே விசுவாசத்திலும் வழிபாட்டுமுறைகளிலும் விளங்கி வந்தது.
அன்னை மரியா, இறைமகிமையில் தன் முழு உடலோடும் ஆன்மாவோடும் இருந்தார் என நான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் 5ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் எருசலேமில் இறைவனின் தாய் அன்னை மரியாவின் விழா சிறப்பிக்கப்பட்டது. 431ம் ஆண்டு எபேசில் கூடிய பொது அவையின் தீர்மானங்களால் புது வடிவம் பெற்றதாக, அன்னை மரியா இவ்வுலகிலிருந்து முழு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துச்செல்லப்பட்டதன் கொண்டாட்டமாக அது இருந்தது. அன்னை மரியாவின் விண்ணேற்பைப் புரிந்துகொள்ள, முதலில் நாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை நோக்கவேண்டும். இறைவனின் தாயாம் அன்னைமரியா, தன் வாழ்வின் துவக்க நொடிகளிலிருந்தே மீட்கப்பட்டவராக, இறைவனின் பாஸ்கா மறையுண்மை முற்றிலுமாக தன்னில் நிறைவேற்றப்பட்டவராக, நமக்கான இறுதி நோக்கை மிகுந்த தெளிவாக எடுத்துக்காட்டுபவராக உள்ளார்.
இறைவனின் வார்த்தைகள் நிறைவேறும் என்பதில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த அன்னை மரியா, பெண்களுக்குள் ஆசீர் பெற்றவர் என அறிவிக்கப்பட்டதை, அவ்வன்னை புனித எலிசபெத்தைச் சந்தித்தபோது நடந்த உரையாடலில் காண்கிறோம். 'ஏழ்மை' மற்றும் ' தாழ்நிலை' உடையோருள் தன்னையும் ஒருவராகக் காணும் அன்னை மரியா, இறைவனில் முழு நம்பிக்கையுடையவராக, தன்னில் இறைவன் வல்லச் செயல்களை ஆற்ற அனுமதிப்பவராக தன் பாடலில் காட்டுகிறார்.
அன்னையின் விண்ணேற்பு நமக்கு ஒளிமயமான வருங்காலத்தைத் திறக்கும் அதேவேளையில், இறைவனில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு அவர் விருப்பத்தை தினமும் நிறைவேற்றவும், அது நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இதுவே நம் இவ்வுலகப் பயணத்தில் நம்மை 'ஆசிப்பெற்றவராக' மாற்றி, விண்ணுலகக் கதவுகளை நமக்குத் திறக்கின்றது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் உரைப்பதுபோல், விண்ணுலகிற்கு எழும்பிச்சென்ற அன்னை மரியா, தொடர்ந்து நமக்காகப் பரிந்துரைத்து, முடிவற்ற மீட்பின் கொடைகளை நமக்குப் பெற்றுத்தருகிறார். இவ்வுலகில் பல்வேறு துன்பங்கள் மற்றும் ஆபத்துக்கள் மத்தியில் இன்றும் பயணம் செய்துவரும் தன் மகனின் சகோதரர்கள், தங்கள் வானுலக வீட்டை அடையும்வரை அவர்களில் அக்கறை கொண்டு பராமரிக்கிறார் அன்னை மரியா. அந்த அன்னை மரியாவை நோக்கி வேண்டுவோம்.
இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அனைவரோடும் இணைந்து மூவேளை செபத்தைச் செபித்தபின் அனைவருக்கும் தன் ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.