2012-08-15 16:00:43

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்தும் ஒரு தருணம் இரமதான்


ஆக.15,2012. இஸ்லாமியர் கடைப்பிடித்துவரும் இரமதான் மாதத்தின் மாலை உணவு, பாகிஸ்தானில் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்தும் ஒரு தருணமாக அமைந்து வருகிறது.
ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 18, இச்சனிக்கிழமை முடிய உலகெங்கும் உள்ள இஸ்லாம் மதத்தவர் இரமதான் மாதத்தைக் கொண்டாடி வருகின்றனர். இம்மாதத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு இருந்து, மாலையில் ஒரு விருந்துடன் தங்கள் நோன்பை நிறைவு செய்து வருகின்றனர்.
Iftar எனப்படும் இந்த உணவு பரிமாற்றம், இலாகூரில் உள்ள Loyola Hall எனப்படும் இயேசு சபையினர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. 'மதங்களுக்கிடையே உறவை வளர்க்கும் இளையோர்' என்ற அமைப்பினாரால் நடத்தப்பட்ட இந்த விருந்தில் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் கலந்துகொண்டனர்.
உணவு பரிமாற்றம் என்பதில் ஆரம்பமாகும் உறவு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு தகுந்த ஓர் அடித்தளம் என்று இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த இயேசுசபை அருள்தந்தை Imran Ghouri கூறினார்.
இந்த விருந்தில் கலந்துகொள்ள பல இஸ்லாமியர் தயக்கம் காட்டினாலும், விருந்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய இளையோர் தற்போது Facebook மூலம் தங்கள் நட்பைத் தொடர்கின்றனர் என்றும் அருள்தந்தை Ghouri கூறினார்.
இதற்கிடையே, இரமாதான் மாதத்தையொட்டி, கிறிஸ்தவ நலவாழ்வு அமைப்பு என்ற ஒரு பிறரன்பு அமைப்பு, இஸ்லாமியப் பெண்களுக்கு உணவு தாயரிக்கும் பொருட்களை வழங்கியுள்ளது என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.