2012-08-15 15:48:02

அவசரக்கால அளவில் செயல்பட்டால் மட்டுமே உணவு பற்றாக்குறை நெருக்கடியை நாம் உலகில் சமாளிக்கமுடியும் - பேராயர் சில்வானோ தொமாசி


ஆக.15,2012. உடனடியாக நாம் செயல்பட்டால் மட்டுமே உணவு பற்றாக்குறை நெருக்கடியை நாம் உலகில் சமாளிக்கமுடியும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கி வரும் ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பாக நிரந்தப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பெட்டியில் ஆகஸ்ட் 27ம் தேதி கூடவிருக்கும் G20 உச்சி மாநாட்டில் உணவுப் பிரச்சனை முக்கிய இடம் பெறவேண்டும் என்று கூறினார்.
தற்போது நிலவிவரும் உணவு பற்றாக்குறை நெருக்கடி, கடந்த 60 ஆண்டுகளில் கண்டிராத அளவு வளர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இந்த நெருக்கடியை உலக அரசுகள் உடனடியாகத் தீர்க்க முயற்சிகள் எடுக்கவில்லையெனில், 2007 - 2008ம் ஆண்டுகளில் நிலவிய உணவு நெருக்கடி பல்வேறு நாடுகளில் கலவரங்களைத் தூண்டியதுபோல், இப்போதும் நிகழக்கூடும் என்ற தன் கவலையை வெளியிட்டார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நிலவும் வறட்சி இந்த உணவு நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறிய பேராயர் தொமாசி, கடந்த ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
உணவு பற்றாக்குறையால் உலகில் தற்போது 17 கோடி குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அவசரக்கால அளவில் இந்த நெருக்கடியைச் சமாளிக்க 800 கோடி டாலர்கள் தேவைப்படும் என்று ஐ.நா. கூறியுள்ளதையும் பேராயர் தன் வானொலி பேட்டியில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.